லாம், வானகந்தனை யமையுமென்றும்பரு மண்ணின்மேல் வரவெண்ணும், ஞான கஞ்சுக னகரியை யெங்ஙனே நாம்வியப்பதுமன்னோ. |
(இ -ள்.) புகுந்த மா மறுகு எல்லாம் - (அந்நகரினுள்ளே விதுரன் உட்புகுந்து செல்கின்ற பெரிய அரசத்தெருக்களிலெல்லாம்,-பல ஆனகம் முழங்க அநேக துந்துபிவாத்தியங்கள் மிகஒலிக்க, எதிர் வந்து பணிந்து - (விருந்தினரை) எதிர்கொண்டுவந்து வரவேற்று வணங்கி, ஆதுலர்க்கு - வறியவரான அவ்விருந்தாளிகளுக்கு, அமுது அன்ன போனகம்-தேவாமிருதம் போன்ற [மிக இனிய] உணவை, பரிந்துஇடும் - (அவரவர்) அன்புகொண்டு அளிக்கப்பெற்ற, நெடுஞ் சாலையே-பெரிய அன்னசாலைகளே (உள்ளன); உம்பரும் - தேவர்களும், வானகந்தனை அமையும் என்று - (தங்கட்கு உறைவிடமான) சுவர்க்கலோகத்தை (இதில் நாம் உறைந்திருந்தது) போதுமென்று வெறுத்து, மண்ணின்மேல் வர எண்ணும் - இந்நிலவுலகத்தினிடத்து (இந்நகரத்துக்குத் தாம்) வந்திடுமாறு கருதுதற்குக் காரணமான, ஞானகஞ்சுகன் நகரியை-ஞானத்தையே (தனக்குக்) கவசமாகக் கொண்டுள்ளவனாகிய தருமபுத்திரனது இந்திரப் பிரத்த நகரத்தை, நாம் வியப்பது - நாம் கொண்டாடிக் கூறுவது, எங்ஙனே-எவ்வாறு? (எ - று.) மன், ஓ - ஈற்றசை. தேவர்களும், கொடையால் மிக்க இந்நகரத்தை வாழிடமாகக் கொள்ள வானுலகத்தை வெறுத்து இங்கு வரவிரும்புகின்றாரானால், இது நம்மாற் கொண்டாடுந்தரத்ததோ என்றவாறு. தேவலோகத்து இராசதானியான அமராவதி நகரத்தினும் செல்வவளமும் இன்பச்சிறப்பும் அழகும் மிக்கது, இந்திரப்பிரத்த நகரமென்றபடி. ஆநகம் - வடசொல்; வெற்றிமுரசு, மங்கலமுரசு, கொடைமுரசு என்ற மூன்றுவகையில் இங்குக் குறித்தது, கொடைமுரசு. ஆதுலர் - வடசொல். அன்புடைமை விருந்தோம்புவார்க்கு இன்றியமையாதாதலால், 'பரிந்துஇடும்' எனப்பட்டது. மறுகு-நெடுந்தெரு. உம்பர் - மேலிடத்தின் பெயர்: தேவர்களைக் குறித்தது; இடவாகுபெயர். எண்ணும் நகரி - பெயரெச்சம்; காரியப்பொருளது. கஞ்சுகம் - மெய்ப்பை, சட்டை. ஞானகஞ்சுகள் - 'தருமமேஜயம்' என்றாற் போன்ற நல்லுணர்வைத் தனக்குப் பாதுகாவலாகக் கொண்டுள்ளவன்; தத்துவஞானத்தாற் போர்க்கப்பட்டவன்: அதாவது மெய்யுணர்வு நிரம்பியவன். எங்ஙன் - எங்ஙனம்: ஏ-அசை. 'புகுந்த மாமறுகு எல்லாம்' என்பதற்கு-யார் எந்தத்தெருவிற்சென்றாலும் அந்தத்தெருவிலெல்லாம் என உரைப்பினும் அமையும். நாம் என்றது - இங்குக் கவிக்கூற்றிற்கு உரிய இயற்கைத் தனித்தன்மைப்பன்மை. (209) 57.-பாண்டவர் விதுரனையெதிர்கொள்ள, அவன் அவர்களைத்தழுவி மகிழ்தல். வந்த னன்சிலை விதுரனென் றோடிமுன்வந்தவ ருரையாமுன், தந்தை தன்றனி வரவறிந் திளைஞருந் தருமனு மெதிர்கொண்டார், |
|