டொன்று உள்ள சிறிது வேறுபாட்டைப் பாராட்டாது அபேதமாகக்கூறுங் கவிசமயம்பற்றி, 'பைங்கடல்' எனப்பட்டது. (210) 58. - பாண்டவர் விதுரனைஉபசரித்தல். கொண்டு தந்தையைத் தாமும்வண்கொடிமதிற் கோபுர நெடுவீதி, அண்ட ராலய மெனத்தகு கோயில்சென் றடைந்தபி னடல் வேந்தர், வண்டு தாமரை மலரெனச் சுழலுமா மலரடி பணிந்தேத்தக், கண்டு வாழ்வுட னவர்க்கருள் புரிந்துதன் கருத்தினால் விடையீந்தான். |
(இ -ள்) தாமும் - அப்பாண்டவர்கள் தாமும், தந்தையை கொண்டு - விதுரனை அழைத்துக்கொண்டு, வள் கொடி மதில் கோபுரம் நெடு வீதி அண்டர் ஆலயம் என தகு கோயில் சென்று அடைந்தபின் - பெரிய துவசங்கள் நாட்டப்பெற்ற மதில்களையும் கோபுரங்களையும் பெரிய வீதிகளையுமுடைய தேவலோகமென்று சொல்லத்தக்க தமது அரண்மனைக்குப் போய்ச்சேர்ந்தபின்பு, அடல் வேந்தர்-வலிமையையுடைய அப்பாண்டவரரசர்கள், வண்டு தாமரைமலர் என சுழலும் மா மலர் அடி பணிந்து ஏத்த - வண்டுகள் தாமரைமலரென்று எண்ணி நெருங்கி வந்து சுழன்று மொய்க்கும்படியான (விதுரனது) திருவடித்தாமரைகளை வணங்கி உபசரிக்க,-கண்டு - (அதனை) நோக்கி, அவர்க்கு வாழ்வுடன் அருள் புரிந்து - அம்மைந்தர்கட்கு ஆசிர்வாதத்தோடு அநுக்கிரகஞ் செய்து, தன் கருத்தினால் விடை ஈந்தான் - தனது மனப்பூர்வமான அன்பினால் (பாண்டவர்கட்கும் உட்காருமாறு) அநுமதி தந்தான்; (எ - று.) இனி, இச்செய்யுளுக்கு-பாண்டவர்கள் விதுரனுடன் தங்கள் அரண்மனை சேர்ந்த பின்பு பல அரசர்கள் விதுரனைத் திருவடி தொழுது துதிக்க விதுரன் அவர்கட்கெல்லாம் ஆசீ்ர்வாத அநுக்கிரகஞ்செய்து, பாண்டவர்களும் தானுமாகத் தனியேயிருந்து பேச வேண்டுமென்று அரசர்கட்கு விடைகொடுத்து அனுப்பினான் என்று உரைத்தலும் பொருந்தும்; அடுத்த செய்யுளில், 'தானும் மைந்தரோரைவரு மொருபுடை தனித்திருந்துழி......................... மொழிகின்றான்' என்பது காண்க. தாமும் - அம்மைந்தர் தாமும் என்றபடி. 'தாமும்' என்ற இறந்தது தழுவிய எச்சவும்மை, கதைத் தொடர்ச்சி பற்றியது. ஆலயம் - இருப்பிடம். 'வண்டு தாமரைமலரெனச்சுழலும் அடி' என்ற விடத்து மயக்கவணிகாண்க. பாதத்துக்கும் தாமரைமலர்க்கும் செம்மை மென்மை அழகுகளில் ஒப்புமை. மீண்டும் 'மாமலர்' என்றது, அடிக்குச் சாதியடையாய் நிற்கும். வாழ்வு=வாழ்த்து. வாழ்வுடன் அருள்புரிந்து - வாழ்வு உண்டாகுமாறு அநுக்கிரகஞ் செய்து என்றுமாம். 'வண்கொடி' என்றது - மதில் கோபுரம் வீதி அண்டராலயம் கோயில் என்றவற்றிற்கெல்லாம் அடைமொழியாகலாம். (211) 59. நான்குகவிகள் - விதுரன்தான்வந்த காரியங் கூறுதல் தானு மைந்தரோ ரைவரு மொருபுடை தனித்திருந் துழிவண்டு, தேனு கர்ந்திசை முரல்பசுந் தொடையலான் றிருத்தக மொழி |
|