கின்றான், கோனு வன்றுதன் றிருமுக மெழுதிநீ கொணர்கமைந் தரையென்ன, யானும் வந்தன னேவலா லழைத்ததற் கேதுவுமுளதன்றே. |
இதுமுதல் ஐந்துகவிகள் - ஒருதொடர். (இ - ள்.) வண்டு தேன் நுகர்ந்து இசை முரல் பசுந்தொடையலான் - வண்டுகள் (மலர்களிலுள்ள) தேனைக் குடித்து(க் களித்து) இசைபாடுதற்கு இடமான பசிய [புதிய] மலர் மாலையைத் தரித்துள்ளவனாகிய விதுரன், தானும் மைந்தர் ஓர் ஐவரும் ஒரு புடை தனித்து இருந்த உழி - தானும் தன்மக்களாகிய பஞ்சபாண்டவர்களுமாக ஓரிடத்தில் (வேறுயாவரும் உடனின்றித்) தனிப்பட வீற்றிருக்கையில், திரு தக மொழிகின்றான் - அழகிதாகச் சொல்கின்றான்,-'கோன் - திருதராஷ்டிரமகாராஜன், நுவன்று தன் திருமுகம் எழுதி - (பத்திரிகையிலெழுதவேண்டிய செய்தியைத் தான்) சொல்லித் தனதாகப் பத்திரிகை எழுதுவித்து, (என்னிடம் கொடுத்து), மைந்தரை நீ கொணர்க என்ன -'பிள்ளைகளை [பாண்டவர்களை] அழைத்துக்கொண்டு வருவாயாக' என்று (எனக்குக்) கட்டளையிட, ஏவலால்-அத்தமையனார் கட்டளையால், யானும் வந்தனன்-நானும் (உங்களை அழைத்ததற்கு) வந்தேன்; அழைத்ததற்கு ஏதுவும் உளது - (அவன் இப்பொழுது உங்களை) அழைத்தற்குக் காரணமும் உண்டு; (எ-று,)--அக்காரணம், அடுத்த மூன்று கவிகளில் விளங்கும். அன்றே - ஈற்றசை: தேற்றமெனினுமாம். விதுரன் பாண்டவரிடம் தனித்திருந்து, திருதராட்டிரன் உம்மை யழைத்துவருமாறு சொல்லிப் பத்திரிகையெழுதி என்னைத் தூதனாக அனுப்பினனென்றானென்பதாம். இருந்துழி=இருந்த உழி: பெயரெச்சவீறு தொகுத்தல், திரு தக -அழகு அமைய: சிறந்தகருத்துப் பொருந்த, கம்பீரமாக எனினுமாம். கோன் -சந்தர்ப்பத்தினாற் சிறப்பாய்த் திருதராட்டிரனை யுணர்த்திற்று. பத்திரிகையை'திருமுகம்' என்றல் மரபு; வடமொழியிலும், 'ஸ்ரீமுகம்' எனப்படும். சிறந்தவாயினாற் சொல்லப்படுஞ் சொற்களடங்கிய தென்றவாறு. (212) | 60. | நீபு ரிந்தநல் வேள்வியின் கடன்கழித்தியாவரு நெடுமாடக் கோபு ரந்திகழ் மூதெயில் வளநகர்க்கோயில் புக் கனமாக நூபு ரந்திக ழிணையடி யரம்பையர்நோக்கருங் கவின்கொண்ட மாபு ரந்தர னிவனென விருந்தனன் வலம்புரி மலர்த்தாரான். |
(இ - ள்.) நீ புரிந்த நல் வேள்வியின் கடன் கழித்து - நீசெய்த சிறந்த (ராஜசூய) யாகத்திற்கு உரிய முறைமையாகிய சடங்குகள் நிறைவேறியபின்பு, யாவரும்-நாங்களெல்லாரும், நெடுமாடம் கோபுரம் திகழ்-உயர்ந்த உபரிகை வீடுகளும் கோபுரங்களும் விளங்கப்பெற்றதும், முது எயில்-பழமையான [தொன்றுதொட்டு அழியாதுள்ள] மதில்கள் சூழ்ந்ததும், வளம்-செல்வவளம் நிறைந்ததுமான, நகர் - (அத்தினாபுரியினது, கோயில் - அரண்மனையை |