பக்கம் எண் :

சூதுபோர்ச் சருக்கம் 225

ஒரு மண்டபத்தைச் செய்வீராக' என்று(சிற்பிகளுக்குக்) கட்டளையிட, ஒட்பம்
நூல் உணர்வுற்றார் - சிறந்த (சிற்ப) சாஸ்திரத்தையறிந்தவர்களான ஸ்தபதிகள்,-
அம்புராசி சூழ் மண் தலத்து அரசு எலாம் அடங்கு பேர் அவைத்து ஆக -
நீர்த்தொகுதியாகிய கடலினாற் சூழப்பட்ட நிலவுலகத்திலேயுள்ள
அரசர்களனைவரும் அடங்கத்தக்க பெரிய சபையையுடையதாக, உம்பர்
ஆலயம் நிகர் என சமைத்தனர் - தேவலோகம் (இதற்கு) உவமையென்று
கூறும்படி (ஒரு சபாமண்டபத்தைக்) கட்டிச் சித்தஞ் செய்தார்கள்; (எ - று.) 

     சபையில் வீற்றிருந்த துரியோதனன், சகுனி கர்ணன் துச்சாதனன்
என்பவரோடும் ஆலோசித்து ஓர் மண்டபம் சிறப்புற அமைக்கும்படி
சிற்பிகட்குக் கட்டளையிட, மிகவும் விசாலமான இடமமையத் தேவலோகத்துச்
சுதர்மைக்கு ஒப்பான பெருஞ்சபா மண்டபத்தை அன்னார்
இயற்றினரென்பதாம். அமைக்கென்ன - வியங்கோளின் அரகவீறு தொகுத்தல்.
மண்டலம் என்று எடுத்து, பூமண்டலம் என்றுங் கொள்ளலாம்; வட்டமான
இடம். இங்கு 'உம்பராலயம்' என்றது - சுவர்க்க லோகத்துத் தேவசபையாகிய
சுதர்மையை யாகலாம்.  'உம்பராலயம் நிகர்என' என்பதற்கு -
தேவலோகசபைக்கு (இம்மண்டபம்) உவமையாமென்று சொல்லும்படி யென்றும்
பொருள்கொள்ளலாம்; உபமேயத்தினும் உபமானம் சிறந்ததாயிருத்தல்
வேண்டுமென்பது, அலங்கார நூலார் துணிபு.  ஒட்பம் - ஒளி:  பண்புப்பெயர்;
ஒள் - பகுதி, பம் - விகுதி: 'மை' விகுதி பெறுகையில், ஒண்மையென நிற்கும்.
இங்கு 'ஒட்பநூல்' என்றது - சிறப்பாய், சிற்பசாஸ்திரத்தைக் குறித்தது.
மூன்றாமடி - அச்சபாமண்டபத்தின் பரப்பை விளக்கிற்று.              (214)
 

62.பெற்ற தந்தையோ டுள்ளுறு முணர்வெலாம்
                            பேசிமண்டபந்தன்னிற்,
கொற்ற வன்குடி புகும்பொழு துன்னையுங்
                           கூட்டிமன்னவைமுன்னர்,
மற்ற மாதுல னெஞ்சமோ வஞ்சமோ மாயமோ
                                  வகுத்தாங்குக்,
கற்ற சூதுநின் னுடன்பொரு நினைவினன் கருத்தினித்
                                  தெரியாதே.

     (இ - ள்.) கொற்றவன் - வெற்றியையுடையவனான துரியோதனன், பெற்ற
தந்தையோடு உள் உறும் உணர்வு எலாம் பேசி - (தன்னைப்) பெற்ற
தந்தையான திருதராட்டிரனுடனே (தன்) மனத்திற் பொருந்திய எண்ணங்களை
யெல்லாஞ்சொல்லி ஆலோசித்து, மண்டபந்தன்னில் குடிபுகும் பொழுது -
அம்மண்டபத்திற் பிரவேசஞ்செய்யும் பொழுது, மற்ற மாதுலன் -
(பங்காளிகளும் பகையாளிகளுமான அத்துரியோதனாதியர்க்கு) மாமனான
சகுனி, உன்னையும் கூட்டி - உன்னையும் அங்கு வருவித்து, மன் அவை
முன்னர் - (அங்குக் கூடுகிற) ராஜசபையின் முன்னிலையிலே, நெஞ்சமோ
வஞ்சமோ மாயமோ வகுத்து - (தான்) மனத்திற் கருதிய ஆலோசனையையோ
வஞ்சனையையோ மாயையையோ செய்து, ஆங்கு - அவ்விடத்தில்
[அச்சமயத்தில்], கற்ற சூது