பக்கம் எண் :

சூதுபோர்ச் சருக்கம் 226

நின்னுடன் பொரும் நினைவினன் - (தான்) பயின்று தேர்ந்துள்ள சூதாட்டத்தை
உன்னுடன் ஆடவேண்டுமென்னும் ஆலோசனையுடையனா யிருக்கிறான்; இனி
கருத்து தெரியாதே - இனி [இவ்வளவு சொன்ன பின்பு] (அவர்களுடைய)
எண்ணம் (உனக்குத்) தெரியாததன்றே;(எ - று.)

    'தெரியாதே' என்பதில், ஏகாரம் - வினாவகையால் எதிர்மறைப்பொருள்
குறித்தது; ஆகவே, இரண்டு எதிர்மறை உடன்பாட்டையுணர்த்தித் தேற்றக்
கருத்தை விளக்க, தெரிந்ததேயாமென்றதாயிற்று.  நினது இராச்சியம் முதலிய
செல்வங்களை யெல்லாங் கவர்ந்துகொள்ள வேண்டுமென்பது அவர்கள்
கருத்து எனக் குறிப்பித்தவாறாம்.  ஏகாரத்தை ஈற்றசையாகக்கொண்டு,
(அவர்களாலோசனை இது); இனி, இவ்விஷயத்தில் உனது) கருத்து (எனக்குத்)
தெரியாது என்று உரைப்பினமாம்.  இனி அவர்கள் கருத்து எனக்குத்தெரியாது
என்று உரைப்பின் விதுரன் பொய் கூறியவனாவன்; இவ்வளவு கூறிவிட்டபின்பு
'அவர்கள் கருத்து எனக்குத் தெரியாது' என்றால், சந்தர்ப்பமுமன்று.
கொற்றவன் - ராஜராஜ னென்றபடி.  நெஞ்சம்-தானியாகு பெயராய், மனத்திற்
கருதிய சூழ்ச்சியைக் குறித்தது; என்றது - தந்திரமென்றவாறு, இதனினுங்
கொடியது, வஞ்சம்; அதனினுங் கொடியது, மாயம்.  மாயம் - மாயா என்ற
வடசொல் விகாரப்பட்டது; இது, மந்திரபலத்தாற் செய்யப்படுவது.     (215)

63.-விதுரன்கொடுத்த திருமகத்தைத் தருமன் வாங்கிச்
செய்தியுணர்தல்.

திருத ராட்டிரன் றிருமுக மிதுவெனச்சென்றி றைஞ்சினன் வாங்கி,
விரத மாக்கமென் றறிந்தறம் பேணுவான் வினைஞர்கைக்
                                   கொடுத்திட்டான்,
இரத மாற்றமங் கெழுதிய படியினா லியம்பலு மதுகேட்டு,
வரத னாற்பணிப் புறுதொழில் யாவர்நா மறுக்கவென்
                                     றுரைசெய்தான்.

     (இ -ள்.) திருதராட்டிரன் திருமுகம் இதுஎன - திருதராஷ்டிரன் அளித்த
பத்திரகை இது வென்றுசொல்லி (விதுரன்) கொடுக்க,-விரதம் ஆக்கம் என்று
அறிந்து அறம் பேணுவான் - (வாய்மை அருளுடைமை முதலிய)
விரதங்களைத் தவறாது அனுட்டித்தலே (இம்மைமறுமைகளில்)
நன்மைவிளைப்பது என்று (தனது உண்மையுணர்வினால்) உணர்ந்து தருமத்தை
மிக்கவிருப்பத்தோடு குறிக்கொண்டு காத்து ஒழுகுபவனான தருமபுத்திரன்,-
சென்று இணைஞ்சினன் வாங்கி - அருகிற்சென்று வணங்கி (இரு கையாலும்)
வாங்கி, வினைஞர் கை கொடுத்திட்டான்-(தன்னிடந்) தொழில்செய்பவர் கையிற்
கொடுத்தான்; (அதனை வாங்கிக் கொண்ட ஏவலாளர்), அங்கு
எழுதியபடியினால்-அப்பத்திரிகையில் எழுதியுள்ளபடி, இரதம் மாற்றம்
இயம்பலும் - இனிமையான வார்த்தையை வாசித்தவளவில்,-(தருமபுத்திரன்),
அது கேட்டு, வரதனால் பணிப்பு உறு தொழில் மறுக்க - 'கடவுளாற் கட்டளை