பக்கம் எண் :

சூதுபோர்ச் சருக்கம் 227

யிடப்பட்ட செயலை நிகழவொட்டாதபடி தடுத்தற்கு, நாம் யாவர்?- நாம் யார்?'
என்று-,உரை செய்தான்-(தன்மெய்யுணர்வுக்கு ஏற்றபடி) கூறினான்; (எ - று.)

    தெய்வசங்கற்பத்தால் நன்மையோ தீமையோ எது விளைவதானாலும்
அதனை மறுக்க நம்மாலாமோ என்று ஆஸ்திகந் தலையெடுத்த வார்த்தையைக்
கூறினன், யுதிஷ்டிர னென்க.  இனி, வரதனென்பதற்குத் த்ருதராட்டிரனது
கட்டளைப்படியன்றித் தமக்கு என ஒரு சுதந்திர மில்லையென்னுங் கருத்தால்
'வரதனாற்பணிப்புறு தொழில்யாவர் நாம்மறுக்க' என்று யுதிஷ்டிரன்
கூறினனென்க.

    திருதராஷ்ட்ரன் என்ற பெயர்-தரிக்கப்ட்ட இராச்சியத்தை
யுடையவனென்று பொருள்படும்; அரசாள்பவனென்று கருத்து;
விசித்திரவீரியனது புதல்வருள் மூத்தவனாய் அரசுக்கு உரியவனாதல்பற்றி,
இவனுக்கு இப்பெயர் ஏற்கும்.  சிறப்புடையனவான அருளுடைமையும்,
வாய்மையும், இங்கு 'விரதம்' என்று குறிக்கப்பட்டன.  'தருமமே ஜயம்'
'சத்தியமே ஜயம்' என்று கருதி அருளுடையனாய் வாய்மை தவறாது அறத்தை
அநுட்டிப்பவனாதலால், தருமன் 'விரதமாக்கமென்று அறிந்து அறம்பேணுவான்'
எனப்பட்டான்.  இனி, விரதமென்ற சொல்லுக்கு - நீக்கமென்று ஒரு
பொருளிருத்தல் கொண்டு, இத்தொடர்க்கு - செல்வம் நீங்குந் தன்மையதென்று
(செல்வ நிலையாமையை) அறிந்து அவாவை மேற்கொள்ளாது
வைராக்கியத்தையே மேற்கொண்டு தருமத்தைப் பரிபாலிப்பவ
னென்றலுமொன்று.  வினைஞர் - தொழிலாளர்; இது - இங்கே,
சந்தர்ப்பத்தினால், ஓலை வாசிக்கும் தொழிலாளர் மேல் நின்றது.  வரதன்
என்ற சொல்லுக்கு-வேண்டுவார் வேண்டும் வரங்களை யளிப்பவ னென்பது
பொருள்.  பணிப்பு உறுதல் - நியமிக்கப்படுதல்.  யாவர்என்பதில், வினா -
எதிர்மறை குறித்தது.  யாவர் நாம்-தன்மையிற் படர்க்கைவந்த இடவழுவமைதி.
இரதம்-ரஸம் என்ற வடசொல்லின் விகாரம்.                        (216)

64.-தருமன் துரியோதனனதுசூழ்ச்சியைப் பழித்தல்

மூத்த தாதைதன் னோலையு மிளையவன்மொழியுமொத் தமை நோக்கி,
வார்த்தை வேறுமற் றொன்றையு முரைத்திலன் மனுநெறி வழுவாதோன்,
சேத்த நாகவெங் கொடியவன் கொடியவன் சிந்தையினிலைதோன்றக்,
கோத்த கோவைநன் றாயினுந் தகுவதோ குருகுலந் தனக்கென்றான்,

     (இ-ள்.) மனு நெறி வழுவாதோன் - மநுதருமசாஸ்திர முறைமை (சிறிதுந்)
தவறாதவனான தருமபுத்திரன்,-மூத்த தாதைதன் ஓலையும் இளையவன்
மொழியும் ஒத்தமை நோக்கி - (தனது) பெரிய தந்தையான
திருதராஷ்டிரனனுப்பிய பத்திரிகையும் சிறிய தந்தையான விதுரன் சொன்ன
வார்த்தையும் (தம்மில்) ஒத்திருந்த தன்மையை யுணர்ந்து,-வார்த்தைவேறு மற்று
ஒன்றையும் உரைத்திலன் - (நியாயத்துக்கு) மாறான வார்த்தை