ஸதாசாரமும், புகழும்-கீ்ர்த்தியும், முன்பயின்ற கல்வியும்-முன்னமே தொடங்கி நெடுநாள் பழகித் தேர்ந்த வித்தையும், (ஆகிய இவையெல்லாம்),-சேர மடியும் - (சூதாடுவார்க்கு) ஒரு சேர அழியும்: ஆல் - ஆதலால், மதி உணர்ந்தவர் - அறிவினால் (அறிய வேண்டுபவற்றை) அறிந்தவர்கள், சூதின்மேல் மனம் வைப்பரோ-சூதினடத்து விருப்பத்தைச் செலுத்துவார்களோ? வையார் - செலுத்தார்; (எ - று.) அடி - முதன்மை: அனைவரும் அக்கிரபூஜை செய்யும் சிறப்பு. இனி 'அடி' - (மேற்சொல்லப்படும் ஆண்மை முதலியவற்றிற் கெல்லாம்) மூலகாரணமான நல்வினை யென்றலும் ஒன்று. ஆண்மை - ஆண் தகைமை: ஆடவர்க்கு உரிய திறம்: பௌருஷம், வீரம். ஆண்மை எனப்பிரியும். ஆள் மை எனப்பிரித்து, ஆளுதல் தன்மையெனக் கொண்டால், அரசாளுந்திறமென்று பொருள்படும். குடி - இடவாகுபெயராய், நாடுமாம்; "படைகுடி கூழமைச்சு நட்பரணாறு, முடையா னரசரு ளேறு" என்ற திருக்குறளின் உரையில், பரிமேலழகர் 'ஈண்டுக் குடி யென்றது, அதனையுடைய நாட்டினை' என்றமை காண்க. மானமாவது - எப்பொழுதும் தம் நிலையில் தாழாமையும்? ஊழ்வினையால் தாழ்வு வந்தவிடத்து உயிர்வாழாமையுமாம். பெருமை - செயற்கரியன செய்தல் முதலிய பெரியாரது தன்மை. குலம் - தான் பிறந்த குலத்தின் சிறப்புமாம். திருக்குறளில் "நின்ற ஒளியோடொழுகப்படும்" என்றவிடத்து 'ஒளி - உறங்கா நிற்கவும் தான் உலகங் காக்கின்ற அவர் கடவுட்டன்மை' என்றும், "ஒளி யொருவற்குள்ளவெறுக்கை" என்றவிடத்து 'ஒளி-தான் உளனாயகாலத்து மிக்குத்தோன்றுத லுடைமை' என்றும் பரிமேலழகர் உரைத்தவை, இங்கு 'தேசு' என்றவிடத்து அறியத்தக்கன; "உறங்குமாயினு மன்னவன் றன்னொளி, கறங்கு தெண்டிரை வையகங் காக்குமால்" என்பது சீவகசிந்தாமணி. தேசு - தேஜஸ் என்ற வடசொல்லின் சிதைவு. தேசு - தேககாந்தியுமாம். படி - பண்பு; நிலைமையும், வடிவின்தோற்றமும், இனி, 'படியும்' என்பதை எதிர்காலப்பெயரெச்சமாகக் கொண்டு, ஒழுக்கத்துக்கு அடைமொழியாக்கி, படிந்த [அமைந்த]வைதிகாசார மெனினுமாம். 'முன்பயின்ற கல்விமடியும்' என்றதனால், இனிக்கல்வியுண்டாகாதென்பது போதரும். "பழகிய செல்வமும் பண்புங்கெடுக்குங், கழகத்துக் காலை புகின்," உடை செல்வமூணொளி கல்வியென் றைந்தும், அடையாவா மாயங்கொளின்" என்ற திருக்குறட்பாக்களும், "உருவழிக்கு முண்மை யுயர்வழிக்கும் வண்மைத், திருவழிக்கு மானஞ் சிதைக்கும்-மருவு மொருவரோ டன்பழிக்கு மொன்றல்ல சூது, பொருவரோ தக்கோர் புரிந்து" என்ற நளவெண்பாவும் இங்கு நோக்கத்தக்கவை. "உடைசெல்வம்" என்ற தொடக்கத்துக் குறளின் உரையில் பரிமேலழகர் 'காலமும் கருத்தும் பெறாமையின், இவையுளவாகா வென்பதாம்' என்றது நோக்குக. 'முன் பயின்ற' என்ற அடைமொழியைப் பிறவற்றிற்கும் கூட்டலாம். "பழகிய செல்வமும்" என்ற தொடக்கத்துக் குறளின் உரையில்,' பழகிய என்பது, பண்புடனும் இயையும்: |