பக்கம் எண் :

சூதுபோர்ச் சருக்கம் 230

தான் செய்துகொள்ளும் அறம் முதலியவே யன்றி, முன்னோரைத் தொடங்கி
வருகின்ற செல்வமும் முன்செய்த நல்வினையின் பயனாய பண்பும் இலவா
மென்பதாம்' என்று பரிமேலழகர் கூட்டிப் பொருள் கொண்டதுபோல.
இவற்றால்சூது சிறுமை பலசெய்து அவற்றான் இருமையுங்கெடுத்தல்
கூறப்பட்டது.

     'மனம்' என்றது - மத்திமதீபமாய், முன்நின்ற 'வைப்பரோ'
என்றதனோடும், பின்நிற்கும் 'வையார்' என்பதனோடும் இயையும்.
வற்புறுத்துதற் பொருட்டு 'வைப்பரோ மனம் வையார்' என வினாவும்
விடையுமாகிய இரண்டுவாய்பாட்டாலும் கூறினார்.                (218)
 

66,குழக ராயிளமடந்தையர்க் குருகுவோர் குறிப்பிலா
                                   மையினாளும்,
பழகு வார்மிகச் சிந்தைநோய் தாங்களே படுக்குமா
                                   றுணராமல்,
அழகு பேரறி வாகவே கொண்டவ ரறத்தொழில்
                                   புரியாமற்,
கழக மாடவும் பெறுவரோ விதனினுங் கள்ளுண
                                   லினிதன்றே.

     (இ-ள்.) குழகர் ஆய் இள மடந்தையர்க்கு உருகுவோர் - யௌவன
பருவமுடையவராயிருந்து இளமையையுடைய மகளிர்க்காக
மனமுருகுகின்றவர்கள் [காமுகர்],--குறிப்பு இலாமையின் - ஆலோசனை
யில்லாமையினால், சிந்தை நோய் தாங்களே படுக்கும் ஆறு உணராமல் -
மனக்கவலையில் தாமே (தம்மை) அகப்படுத்திக் கொள்ளுகிற
வகையைத்தெரிந்து கொள்ளமாட்டாமல், நாளும் மிகபழகுவார் - எந்நாளிலும்
(சூதாட்டத்தில்) மிகுதியாகப் பழகுவார்கள்; பேர் அறிவே அழகு ஆக
கொண்டவர் - சிறந்த அறிவையே (தமக்கு) அழகாகக்கொண்ட
பெரியோர்களோவென்றால்,-தொழில் புரியாமல் - தருமகாரியங்களைச்
செய்யாமல், கழகம் ஆடவும் பெறுவரோ - சூதாடுவார்களோ? இதனினும் -
இந்தச் சூதாட்டத்தினும், கள் உணல் - கட்குடிப்பது, இனிது அன்றே -
இனியதன்றோ; (எ - று,)

    அறிவில்லாத கீழ்மக்கள், சூதாட்டத்தினால் தங்களுக்குத் தாங்களே
துன்பமூட்டிக்கொள்ளுதலை அறியுந்திறமில்லாமல், ஆடுங்காலத்திலுண்டாகும்
சிறுமனமகிழ்ச்சியையே பெறாப் பேறாகப் பாராட்டி,
சிற்றின்பத்திலழுந்தியதுபோலவே இச் சூதாட்டத்திலும் மிகப்பழகுவார்கள்;
அறிவுடையவர்களோ, சூதாட்டத்தினால் விளையுந் தீங்கைத் தமது
பேரறிவினால் நன்கு உணர்ந்து, அச்சூதாட்டத்தை மிகவெறுத்துத்
தருமகாரியங்களையே மேற்கொண்டொழுகுவர் என்றவாறு.  திருவள்ளுர்
குறளில் 'பெண்வழிச் சேறல்,' 'வரைவின் மகளிர்,' 'கள்ளுண்ணாமை' 'சூது'
என்ற அதிகாரங்களை ஒன்றன்பின் ஒன்றாக நிறுத்தியதும், அவற்றுள்
வரைவின் மகளிரென்னும் அதிகாரத்தின் இறுதியில் "இருமனப்பெண்டிருங்
கள்ளுங் கவறுந், திரு நீக்கப்பட்டார் தொடர்பு" என்றதும், அக்குறளினுரையில்
பரிமேலழகர் 'ஒத்தகுற்றத்தவாகலின், கள்ளும் சூதும் உடன் கூறப்பட்டன;
வடநூலாரும், இக்கருத்தான், விதனமென உடன் கூறினார்" என்றதும், இங்கு
உணரத்தக்கவை.  சூதாடுதலைக் கட்குடித்தலினும் கொடியதாகக் கூறியது,
கள்ளுண்ணுதலில் உண்டாகும் பொல்லாங்குகள் குடிப்பவரளவிலேயே யடங்கி