பகுதியே வினையெச்சப் பொருள்பட்டு நின்றது; "வரிப்புனைபந்து" என்னுமிடத்திற்போல. (221) 69.-விதுரனது உத்தரம். இங்கு நீயெனக் கியம்பியயாவையும் யானுமன் னவர்கேட்ப, அங்கு நீர்மையின் மொழிந்தன னென்மொழி யார்கொலோ மதிக்கிற்பார், பொங்கு நீருடைப் பூதலத் தலைவகேள் புனைந்தநின்னியதயத்துத், தங்கு நீர்மையிற் புரிகெனப் புதல்வனைத் தந்தையுந் தகச்சொன்னான். |
(இ -ள்.) 'இங்கு-, நீ-, எனக்கு என்னிடத்தில், இயம்பியசொல்லிய, யாவையும் - எல்லாவற்றையும், யானும்-, அங்கு - அவ்விடத்தில், அன்னவர் கேட்ப - அந்தத் துரியோதனன் முதலியோர் கேட்கும்படி, நீர்மையின் மொழிந்தனன் - தக்கவகையாகச் சொன்னேன்; என்மொழி யார்கொலோ மதிக்கிற்பார் - (அங்கே) என்வார்த்தையை எவர்தாம் நன்குமதித்துக் கேட்டவர்? [எல்லோரும் அலட்சியஞ் செய்தன ரென்றபடி]; பொங்கும் நீர் உடை பூ தலம் தலைவ-பொங்குமியல்புள்ள கடலை ஆடையாகக்கொண்ட பூமிக்குத் தலைவனே! கேள்-கேட்பாயாக; புனைந்த நின் இதயத்து தங்கும் நீர்மையின் புரிக - (கல்வி கேள்விகளினாற்) சிறப்படைந்துள்ள உனது மனத்தில் தோன்றும் விதமாகவே செய்வாயாக,' என-என்று, புதல்வனை- மைந்தன் முறையாகின்ற தருமபுத்திரனை நோக்கி, தந்தையும்-(சிறிய) தகப்பன்முறையான விதுரனும், தக-தகுதியாக, சொன்னான்-; (எ - று.) 'நின்கருத்தை நீ உரை' என்று கீழ்த் தருமன் வினாவியதற்கு, விதுரன் தன் எண்ணத்தை உள்ளபடி கூறாமல் முன்பு அத்தினாபுரியில் நிகழ்ந்த செய்தியை எடுத்துச்சொல்லி ஒருவாறு தன்கருத்தைக் குறிப்பித்து 'உன் விருப்பத்தின்படியே செய்' எனக் கூறி முடித்தது - ஐவரை அழைத்துவரும்படி தூதுவந்த தான் அதற்கு மாறாகத் தன்கருத்தை நேரேசொல்வது, தன்னைத் தூதனுப்பிய திருதராஷ்டிரனுக்குத் தான் வஞ்சனை செய்ததாய் முடியும் என்று கருதியதனா லென்க; இவ்வாறு தூதனிலக்கணத்திற்கு மாறுபடாமற் கூறினமையைப் பாராட்டி 'தந்தையுந் தகச்சொன்னான்' என்றார். தான் கூறிய உறுதிமொழியை மதியாது அலட்சியஞ் செய்தமையைக் குறித்து 'யார்கொலோ மதிக்கிற்பார்' என விதுரன் குறைகூறின னென்க; இவ்வாறு விதுரன் கூறியது, 'தருமனும் தன்மொழிப்படியே நடப்பானோ? நடவானோ?' என்ற ஐயக்கருத்தையும் தொனிப்பிக்கும். விதுரன் தருமபுத்திரனிடத்து நன்கு மதிப்புடைய னாதலின், 'புனைந்தநின்னிதயம்' என்றான்; அன்றி, துரியோதனாதியர் தாம் கேளாவிட்டாலும் நீயாவது கேட்டு அதன்படி நடக்கவேண்டு மென்று கூறுவான், யுதிஷ்டிரனைமேம்படுத்தி 'புனைந்த நின்னிதயம்' எனக் கூறினானுமாம். |