கொள்ளப்பட்டது; இது ஆகுபெயரின் பாற்படும். 'காற்றருள் கூற்றன்னான்' - பிராஸம். நினைத்தபடியே பின்னிடாமற் போர்செய்து கொன்று வெல்லுந்திறமுடையா னென்பது தோன்ற, வீமனை 'கூற்றன்னான்' என்றார்; பண்புந்தொழிலும்பற்றிய உவமை. அந்த யமன் சூரியன்பெற்ற புதல்வன்: இந்த வீமனாகிய யமனோ வாயுபெற்ற புதல்வன்: இந்த வேறுபாடேயன்றி, பல பராக்கிரமங்களில் இவ்விருவர்க்கும் ஏற்றத்தாழ்வில்லை யென்பது, 'காற்றருள் கூற்றன்னான்' என்பதனாற் போதரும். 'இருப்பு' என்பதற்கு - குடியிருத்தலெனவும், உரியபொருளெனவும் உரை கூறுவாருமுளர். (223, 224) 72.-அருச்சுனன் வார்த்தை. தேற லார்தமைத் தேறலுந்தேறினர்த் தேறலா மையுமென்றும் மாற லாருடன் மலைதலு மாறுடன்மருவிவாழ் தலுமுன்னே ஆற லாதன வரசருக் கென்றுகொண்டரசநீ தியிற்சொன்னார் கூற லாதன சொல்வதென் செல்வதென்கொடியவ னருகென்றான். |
(இ -ள்.) (பின்பு அருச்சுனன் தருமபுத்திரனை நோக்கி), 'தேறலார்தமை தேறலும் - தெளியப்படாதவர்களை நம்புதலும், தேறினர் தேறலாமையும்- தெளியப்பட்டவர்களை(ப் பின்பு) நம்பாதிருத்தலும், என்றும் மாறு அலாருடன் மலைதலும் - ஒருநாளும் (தம்மோடு) பகைக்குந் தன்மையில்லாத நண்ப(ரைப் பகைவரென்று கொண்டு அவ)ரோடு பொருதலும், மாறுடன் மருவி வாழ்தலும் - பகைவருடனே நட்புக்கொண்டு கலந்து வாழ்தலும், (ஆகிய இச்செயல்கள்), அரசருக்கு ஆறு அலாதன - அரசர்கட்கு முறைமையல்லாத காரியங்களாம், என்றுகொண்டு - என்று, முன்னே-முற்காலத்திலேயே, அரசநீதியில் சொன்னார் - அரசர்கட்கு உரிய நீதி நூல்களில் (ஆன்றோர்) கூறியுள்ளார்; கூறலாதன - (அரசர்கட்கு உரியனவென்று) சொல்லாமல் விலக்கியுள்ளவற்றை, சொல்வது - (அரசநீதியை நன்கு உணர்ந்த நீ இப்பொழுது செய்யவேண்டிய காரியமாக) எடுத்துச்சொல்வது, என் - யாது காரணம்பற்றி? கொடியவன் அருகு செல்வது என் - (நம்மிடத்துக்) கொடும் பகைமைகொண்டுள்ளவனாகிய துரியோதனனை (உரியநண்பனாகக் கருதி நாம்) அவனருகிற் செல்வது எதற்காக? என்றான்- என்று கூறினான்; (எ - று.) அரசன் ஒருவனைப் பலவகையாலும் சோதித்து 'தக்கவன்' என்று துணிந்தபின்பே அவனைத் தன்னிடத்து வினைசெய்பவனாகக் கொள்ள வேண்டும்; அவ்வாறு ஆராய்ந்து தெளியப்படாத ஒருவனை வினைசெய்பவனாகக் கொண்டாலோ, அவ்வினைகெடத் தான்கெடுவதோடு தன்குலத்துப் பிறந்தாரும் பகைவர்கைப்பட்டுக் கீழாய்விடுவர்: அவ்வாறே சோதித்து அறிந்து தெளிந்தவனிடத்துத் தொழிலைவைத்துப் பின்பு ஒருதவறுங் காணாதிருக்கையில் ஐயுற்றால் அதனை அவன் அறிந்து 'இனி இத்தொழில் நமக்குநிலை |