பக்கம் எண் :

சூதுபோர்ச் சருக்கம் 241

வருதலால், 'காவலர் என்றதற்கு-காவலாளரென்று பொருள் கொள்ளப்பட்டது:
முரசறைந்து எங்கணுங் காவலர் குழூஉக்கொண்டார்-காவலர் எங்கணும்
குழூஉக்கொண்டு முரசறைந்தார் என விகுதி பிரித்துக் கூட்டுக.  வேளை ஏறிய
- மன்மதனைக் காட்டிலும் அழகு மிக்க என்றும் உரைக்கலாம்.  வாளை -
மீன் வகையி லொன்று.  புதுவருவாய் நன்னீரை யெதிர் கொள்ளுதல், மீனின்
இயல்பு.                                                    (228)

76.-திரண்ட சேனைகளின்வருணனை.

மாது ரங்கம மணிநெடுந் தேர்மதவாரணம் வயவீரர்
சாது ரங்கமுந் தந்திரத் தலைவருந்தரணிமன் னருஞ்சூழ
மீது ரங்கவின் கெழுபெருஞ் சேனைசூழ்வேந்தன்மா நகருற்ற
போது ரங்கமு நெளிந்தன பஃறலைபொறாமையி னிருநான்கும்.

     (இ -ள்.) மா துரங்கமம் - பெரிய குதிரைகளும், மணி நெடுந்தேர் -
மணிகள் கட்டிய பெரியதேர்களும், மதம் வாரணம் - மதங்கொண்ட
யானைகளும், வய வீரர் - வலிமையையுடைய காலாள் வீரர்களும், (ஆகிய),
சாதுரங்கமும்-சதுரங்க சேனைகளும், தந்திரம் தலைவரும் -
சேனைத்தலைவர்களும், தரணி மன்னரும் - பூமியைக் காக்கின்ற
அரசர்களும்,- மீது உரம் கவின் கெழு - மேலான பலமும் அழகும் நிறைந்த,
பெருஞ்சேனை-மிக்கசேனைகள், சூழ-சூழப்பெற்ற, வேந்தன் -
யுதிஷ்டிரராஜனது, மாநகர் - பெரிய இந்திரப் பிரத்தநகரத்தில், சூழ் உற்ற
போது-சுற்றிலும் [எல்லாப் பக்கங்களிலும்] வந்து நிறைந்தபோது, இருநான்கு
உரங்கம்உம் - (பூமியைத்தாங்குகின்ற) அஷ்ட மகாநாகங்களும், பொறாமையின்
- (அப்பாரத்தைச்) சுமக்கமாட்டாமையினால், பல தலையும் நெளிந்தன -
(தமது) பலதலைகளும் நெளியப்பெற்றன; (எ - று.)

    அஷ்டமஹாநாகங்கள் தலைநெளிந்தன வெனக்கூறியது, அதிசயோக்தி
யலங்காரம்; இது, சேனைத்தொகுதியின் மிகுதியை விளக்கும்.
அஷ்டமஹாநாகங்களாவன - வாசுகி, அநந்தன், தக்ஷகன், சங்கபாலன்,
குளிகன், பதுமன், மகாபதுமன், கார்க்கோடகன் என்பன;  இவை, முறையே
கிழக்கு முதலிய எட்டுத் திக்குக்களிலும், கீழ்இருந்து பூமியைத் தாங்குவன.
இனி, மா - குதிரையும், துரங்கமம் மணி நெடுந் தேர் - குதிரைகள் கட்டிய
அழகிய பெரிய தேர்களும் என்றும் பொருள் கூறலாம்.  துரங்கமம் -
விரைந்துசெல்வது எனக் குதிரைக்குக் காரணக்குறி.  தந்திரம் - சேனை.
சாதுரங்கம், உரங்கம் - சதுரங்கம், உரகம் என்பவற்றின் விகாரங்கள்; உரகம் -
(கால்களில்லாமையால்) மார்பினால் ஊர்ந்துசெல்வது எனப் பாம்பிற்குக்
காரணக்குறி.  பல+தலை=பஃறலை.  'உரங்கமு நெளிந்தன பஃறலை -
உரங்கமும் பஃறலையும் நெளிந்தன என உம்மைபிரித்துக் கூட்டுக.  இனி,
உரங்கமும் - ஆதிசேஷனும், இரு நான்கும் - மற்றை அஷ்டநாகங்களும்
எனினும் பொருந்தும்.  ஆதிசேஷன், நடுவிலேயிருந்து பூமியைத் தாங்குவன்.
                                                          (229)