77.-பாண்டவரைவரும்ஐந்துதேரின்மேல் ஏறுதல். ஐந்து பூதமே நிகரெனப் புலன்களோரைந்துமே ரெதிரென்ன ஐந்து காவுமே பொருவெனப் பணிமுடியைந்துமே நேரென்ன ஐந்து வாளியே யுறழ்வென வேள்வியோரைந்துமே யொப்பென்ன ஐந்து வாசமே தரமென வைவருமைந்துதேர் மேல்கொண்டார். |
(இ -ள்.) ஐந்து பூதமே நிகர் என - பஞ்சபூதங்களும் ஒப்பென்று சொல்லும்படியும், புலன்கள் ஓர் ஐந்துமே எதிர் என்ன - ஐம்புலன்களும் ஒப்பென்று சொல்லும்படியும், ஐந்து காவுமே பொருவு என - (தேவலோகத்துப்) பஞ்ச தருக்களும் ஒப்பென்று சொல்லும்படியும், பணி முடி ஐந்துமே நேர் என்ன - நாகத்தினது ஐந்துதலைகளும் ஒப்பென்று சொல்லும்படியும், ஐந்து வாளியே உறழ்வு என - (மன்மதனது) பஞ்சபாணங்களும் ஒப்பென்று சொல்லும்படியும், வேள்வி ஓர் ஐந்துமே ஒப்பு என்ன - பஞ்ச மஹாயஜ்ஞங்களும் ஒப்பென்று சொல்லும்படியும், ஐந்து வாசமே தரம் என - ஐந்துமுகவாசப் பொருள்களும் ஒப்பென்று சொல்லும்படியும், ஐவரும் - பஞ்சபாண்டவர்களும், ஐந்து தேர் மேல் கொண்டார் - ஐந்து தேர்களின்மீது ஏறிக்கொண்டார்கள்; (எ - று.) உலகத்துக்கு இன்றியமையா திருத்தலாற் பஞ்சபூதங்களையும், மெய்வாய் கண் மூக்குச்செவி யென்ற பஞ்சேந்திரியங்கட்கும் உரிய விஷயமாய் நிற்றலால் ஐம்புலன்களையும், வேண்டியவற்றை வேண்டியபடியே கொடுக்கின்றமையாற் பஞ்சதேவதருக்களையும், "ஐவருக்குமோருயிரே" ஆதலால் நாகத்தின் ஐந்துதலைகளையும், கட்டழகுடைமைபற்றி மகளிர்க்கன்றி ஆடவர்க்கும் அவாவையுண்டாக்குதலால் மன்மதனது பஞ்சபாணங்களையும், தேவர் முதலியோர்க்குத் திருப்திசெய்வித்தலாற் பஞ்ச மஹாயஜ்ஞங்களையும், மிக்ககளிப்பைத் தருதலால் முகவாசப் பொருள்க ளைந்தையும் பஞ்ச பாண்டவர்க்கு உவமைகூறின ரென்க; பலபடப்புனைந்த உவமையணி. பேராற்றலுடைமைபற்றிப் பஞ்சமகாபூதங்களையும், இன்றியமையாச்சிறப்புப்பற்றி ஐம்புலன்களையும், தவறாது வெல்லும் வல்லமைபற்றி ஐந்து வாளிகளையும், வைதிகர்களால் மேற்கொள்ளப்படுஞ் சிறப்புப்பற்றி ஐந்து வேள்விகளையும், அனைவராலும் விரும்பப்படுந் தகுதிபற்றி ஐந்து வாசங்களையும் பஞ்சபாண்டவர்க்கு உவமை கூறியதாகவுங்கொள்ளலாம். 'ஐந்து' என்றசொல் பலமுறை அடுக்கிவந்தது - சொற்பொருட்பின்வருநிலையணியும். ஒப்புமை குறிக்கும் வெவ்வேறு பலசொற்கள் வந்தது - பொருட்பின்வருநிலையணியுமாம். ஐந்துபூதம் - நிலம், நீர், தீ, காற்று, வானம் என்பன. புலன்கள் - சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம் என ஐந்து. தேவதருக்கள் - மந்தாரம், பாரிஜாதம், ஸந்தாநம், கற்பகம், அரிசந்தனம் என்பவை. பஞ்சபாணம் - தாமரைமலர், மாமலர், அசோகமலர், முல்லைமலர், கருங்குவளைமலர் என இவை. பஞ்சமஹாயாகங்கள்- |