அத்திரிமுனிவரது விழியினின்று சந்திரன் தோன்றிய வரலாறு:- உபப்பிரமராகிய அத்திரிமுனிவர் இந்திரியநிக்கிரகஞ் செய்து மூவாயிரம் வருடந்தவம்புரிகையில் தேஜோரூபியாகிய அவரது கண்களிலிருந்து பத்துத் திக்குக்களிலும் பேரொளிவீசிக்கொண்டு நீர் பெருகவே, அந்தக்கருப்பத்தைத் திக்தேவிகள் பதின்மரும் தாங்கத்தொடங்கிய பின்பு தங்களால் பொறுக்க முடியாமல் சந்திரரூபமான அந்தக்கருப்பத்தோடு பூமியில்விழ, அப்பால் நான்முகக் கடவுள் அச்சந்திரனை வேதமயமான தேரின் மீது ஏற்ற, ஸப்தரிஷிகள் முதலானவர்கள் வேதவாக்கியங்களைக் கொண்டு துதித்ததனால் அச்சந்திரன் மிக்க ஒளிபெற்று உலகத்துக்குப் பேரொளியைத் தருபவனாயின னென்பதாம். சந்திரன் திருமாலின் மனத்திலிருந்து தோன்றினானென்பது, வேதத்திலுங் கூறப்பட்டிருக்கின்றது; "(திண்சுடராழியரங்கேசர் திக்குத்திருச்செவியின், மண்கழலிற் சத்யலோகஞ்சிரத்தின் மருத்துயிரில், தண்கதிருள்ளத்தில்வானுந்தியிற் செந்தரணிகண்ணில், ஒண்கன லிந்திரன்வாழ் முகப்போதி லுதித்தனரே" என்ற திருவரங்கத்து மாலையையுங் காண்க.) பாற்கடல்கடைந்தபோது அதனினின்று சந்திரன் தோன்றியமை பிரசித்தம். சந்திரன் அத்திரிமுனிவரது விழியிலும் திருமாலின் மனத்திலும் நெருப்புமுகத்திலும் திருப்பாற்கடலிலும் தோன்றியமையை, கீழ் ஆதிபருவத்திலும் "அத்திரிப் பெயரந்தணனம்பகந்தனிலுஞ், சித்திரக்கனன் முகத்திலும் பிறந்தொளி சிறந்தோன்," எங்கண்மாதவ னிதயமா மலர்வரு முதயத், திங்கள், "அம்புராசியி னாரமுதுடனவதரித்தோன்" எனக் கூறியுள்ளார். சந்திரன் பிரமசிருஷ்டிக்கு உட்பட்டவனாதலால் 'விதிபடைப்பினிற்றோன்றி' என்றார். இங்குக்கூறிய ஐவகைப்பிறப்பிடங்களுள் நெருப்பினின்று தோன்றிய வரலாறு வந்தவிடத்துக் கண்டுகொள்க. இனி, வான் நெருப்பின் - ஆகாயத்திலிருக்குஞ் சூரியனிடத்தினின்று என்று பொருள் கொள்ளுதலும் ஒன்று; சந்திரன் கிருஷ்ணபட்சத்தில் நாடோறும் ஒவ்வொருகலையாகக் குறைந்து கடைசியாக ஒற்றைக்கலையாய் நின்று அமாவாசியையன்று சூரியனோடு சேர்ந்து பின்பு அவனிடத்திலிருந்து வெளிப்படுவதாலும், அன்றியும் சூரியனிடத்திலிருந்தே ஒளியைப்பெறுவதாலும் இவ்வாறு கூறப்பட்டது என்க; (சூரியனுக்கு 'சித்ரபாநு' என ஒருபெயருள்ளதனால், "சித்திரக் கனல் முகத்து" என்றதற்கும் - விசித்திரமான சோதியையுடைய சூரியனிடத்தினின்று எனப்பொருள் காணலாம்.) (231) 79.-இனி ஆறுகவிகளால்,சதுரங்கசேனைகளை வருணிக்கின்றார்: இதுவும், அடுத்த கவியும் - யானைகளின் வருணனை. மைத்திறத்தினின் றதிர்வன முதிர்வன வரைத்திறத் தினுமோங்கு மெய்த்திறத்தன வெழுதிறத் தினுமிக விடுவன மததாரை எத்திறத்தினும் பொருதொழில் புரிவன வேழுறுப் புறத்தாழ்ந்த முத்திறத்தன வெண்ணலப் பிறப்பின மூரிவெங் களியானை. |
|