பக்கம் எண் :

சூதுபோர்ச் சருக்கம் 245

     (இ -ள்.) மூரி வெம் களி யானை-வலிய கொடிய மதக்களிப்பையுடைய
யானைகள்,- மை திறத்தின் நின்று அதிர்வன-மேகங்களின்
வருக்கம்போல்நின்று முழங்குவனவும், முதிர்வன வரை திறத்தினும் -
மிகப்பெரியவையான மலைக்கூட்டங்களைப் பார்க்கிலும், ஓங்கு மெய் திறத்தன-
உயர்ந்து வளர்ந்த உடம்பின் தோற்றத்தையுடையனவும், எழுதிறத்தினும் மதம்
தாரை மிக விடுவன - ஏழு வகையுறுப்புக்களாலும்  மதநீர்ப்பெருக்கை
மிகச்சொரிவனவும், எதிறத்தினும் பொரு தொழில் புரிவன - எல்லா
வுறுப்புக்களாலும் போர்த்தொழிலைச்செய்வனவும், ஏழு உறுப்பு உற தாழ்ந்த -
ஏழு அவயவங்கள் நன்றாகத்தாழ்ந்து நிலத்திற் படியப் பெற்றனவும்,
முத்திறத்தன எண் நலம் பிறப்பின - மூவகையான நன்கு மதிக்கத்தக்கநல்ல
பிறப்பையுடையனவுமா யிருந்தன; (எ - று.)

    யானைக்கு, மேகம் - கருநிறத்திலும், கர்ச்சித்தலிலும் தாரை
பொழிதலிலும் உவமை.  மததாரைகள் விடும் ஏழு உறுப்பாவன -
கன்னமிரண்டும், கண்ணிரண்டும், துதிக்கைத் துளையிரண்டும்,
கோசமொன்றுமாம்.  எத்திறத்தினும் பொருதொழில்புரிதலாவது-கால்களினால்
மிதித்தும், துதிக்கையினால் அறைந்தும் பற்றியும் இழுத்தும், தந்தங்களினாற்
குத்தியும், மத்தகத்தால் முட்டியும், வாலால் வீசியடித்தும் போர்செய்தல்;
"கோடுகைம்முதலா வொன்பதுறுப்பினுங் கோறல்வல்ல, நீடுயர்மா" என்பர்,
மேற் பதினாறாம் போர்ச்சருக்கத்திலும். ஏழுறுப்பு உறத்தாழ்தல் - கால்
நான்கும் வாலொன்றுங், கையொன்றும், கோசமொன்றும் நிலத்திற்படியுமாறு
தாழ்ந்திருத்தல்.  அரசயானையின் இலக்கணத்தில் 'காலொரு நான்குந்
தனிக்கையுங் கோசமும், வாலுறுப்போ டேழு மாநிலந்தோய்ந்து" என்று வருதல்
காண்க.  வரைத்திறத்தினும் முதிர்வன - மலைவகைகளிலும் வலிமை மிக்கன.
ஓங்கும் மெய்த்திறத்தன - உயர்ந்த உடம்பின் தோற்றத்தையுடையன என்றும்
பொருள் கொள்ளலாம்.  ஏழுமுழம் உயர்ந்திருத்தல், உத்தமகஜலக்ஷணம்.

     முத்திறத்தன யானை - கிரிசரம், நதிசரம், வனசரம் என்பன: "கிரிசரம்
வனசரம் நதிசரமென்றிவை, நிலைபெறுநிலமென நிறுத்தி சினோரே" என்ற
பன்னிருபாட்டியலாலும், 'கிரிசரம் வனசரம் நதிசர மடுத்துப், பெறுமே யானை
பிறந்த நிலப்பெயர்" என்ற பிங்கலந்தை திவாகரங்களினாலும்,
இலக்கணவிளக்கவுரையாலும் அறிக.  இவற்றுள், கிரிசரம் - மலையிற் பிறந்தது.
நதிசரம் - யாற்றுச்சார்பிற் பிறந்தது; வனசரம்-காட்டிற் பிறந்தது.  இனி, வேறும்
யானையின் மூன்றுவகை- பத்ரம், மந்த்ரம், ம்ருகம் என்பன; இவற்றின்
இலக்கணம் வருமாறு: தேனின் நிறம் போன்ற நிறமுள்ள தந்தமும்
மிக்கவலிமையும் ஒத்த அவயவமும் வட்டமான வடிவமும் அழகிய முகமும்
அவயவச்சிறப்பு முடையது, பத்ரம்.  பருத்த வயிறும் சிங்கநோக்கும் பருத்த
தோலுள்ள கழுத்துத் துதிக்கைகளும் நடுத்தரமான அவயவமும் நீண்டஉடம்பும்
உடையது, மந்த்ரம்: பருத்ததல்லாத கழுத்து மருப்புக் காது துதிக்கைகளும்
பருத்த கண்களும் குறுகிய உதடு குறிகளும் குறிய உடம்பும்