பக்கம் எண் :

சூதுபோர்ச் சருக்கம் 247

போதகம் - பத்து வருஷத்து யானைக்கன்று.  போதகத்து ஆனை என்று
பிரித்தால, போதகமாகிய யானையென்க.  புகல்கிற்பாம் - கவிகளுக்கு உரிய
இயற்கைத் தனித்தன்மைப் பன்மை.  யானை எழுந்து நின்ற சமயத்தில்
அவற்றின் உடல் மேகமண்டலத்தே மறையுமெனத் தொடர்புயர்வு
நவிற்சியணி
படக் கூறினார்;  இதனால் யானையின்மிக்க உயர்ச்சி விளங்கும்.
உடல் மறைந்தது - சாதியொருமை.  (சாதியொருமையாவது ஒரு சொல்
ஒருமையீறு தோன்ற நின்றும், தோன்றாதுநின்றும் பன்மைப் பொருள்
உணர்த்துவது; இதனை, வடநூலார் 'ஜாத்யேகவசநம்' என்பர்.) மற்றை
மூவகைச் சேனைகளும் கடல்போலப் பரந்திருக்க அவற்றின் நடுவே
வரிசையாய் ஒழுங்குபட்டுள்ள யானைகளுக்குக் கடலினிடையிற் கட்டப்பட்ட
சேது உவமையாமென்க.  தண்டகாரண்யத்திற் சீதையை யெடுத்துக்கொண்டு
போன இராவணன் இலங்கையில் அவளைச் சிறைவைத்திருத்தலைத் தூது
சென்று மீண்ட அநுமானால் அறிந்த இராமபிரான்
அவ்விராவணனையழித்தற்காக இலங்கை சேர்தற்பொருட்டு இடையிலுள்ள
தென்கடலைக் கடக்கவேண்டிய சமயத்தில், அப்பெருமானுடைய அநுமதியால்
வாநரங்கள் மலைகளை யெடுத்துக் கொண்டு வந்து போகட்டுக் கடலினிடையே
அணைகட்டின என்ற வரலாறு பிரசித்தம்.                       (233)

81.-இதுமுதல் மூன்றுகவிகள் -குதிரைகளின் வருணனை.

சுற்று நீளமு முயரமு நிகர்ப்பனசுழியின்மிக் கனதீமை
அற்று மேதகு நிறத்தன கவினுடையவயவத் தனவாகி
எற்று மாமணி முரசமுஞ் சங்கமுமெனுங்குரன் மிகுத்திப்பார்
முற்று மாதிரத் தளவுமைங்கதியினான் முடிப்பன விமைப்போதில்.

     (இ -ள்.) (அச்சேனையிலுள்ள குதிரைகள்),-சுற்றும் நீளமும் உயரமும்
நிகர்ப்பன - சுற்றளவும் நீளமும் உயரமும் (இலக்கணத்திற்கு) ஒத்தனவும்,
சுழியின் மிக்கன - சுழியினால் மேம்பட்டனவும் [மேம்பட்ட
சுழிகளையுடையனவும்], தீமை அற்று மேதகு நிறத்தன - குற்றங்களொழிந்து
மேன்மையான நல்ல நிறத்தையுடையனவும், கவின் உடை அவயவத்தன ஆகி
- அழகையுடைய உறுப்புக்களை யுடையனவுமாக இருந்து, எற்று மா
மணிமுரசமும் சங்கமும் எனும் குரல் மிகுத்து - அடிக்கப்படுகின்ற பெரிய
அழகிய முரசவாத்தியமும் சங்கும் ஒப்பாகச் சொல்லத்தக்க குரலோசை
மிக்கனவாய்,- இ பார் முற்றும் - இவ்வுலக முழுவதையும், மாதிரத்து அளவும்
- திக்குக்களின் எல்லையையும், ஐங் கதியினால் - (தமது) ஐவகை
நடைவிகற்பங்களினால், இமைபோதில் - ஒரு நிமிஷத்திற்குள், முடிப்பன -
சுற்றி வருந் தன்மையையுடையன;  (எ - று.)

    உத்தமமான குதிரைகட்கு உயரத்தினளவு - நூற்றெட்டு விரற்கிடையும்,
நீளத்தினளவு - நூற்றுத்தொண்ணூற்றிரண்டு விரற்கிடையும், வயிற்றின் சுற்றளவு
- நூற்றுப் பதினொரு விரற்கிடையுமாம்:  இது வடநூலுட் கண்டது: இனி,
உயரம் நூறு