பக்கம் எண் :

சூதுபோர்ச் சருக்கம் 250

ஏற்றிக்கூறியதனால், இது - ஒன்றில் ஒரு தன்மையை நீக்கி மற்றொரு
தன்மையை ஏற்றிக்கூறும் அபநுதியணியாம்;  இது, ஒழிப்பணி யெனவும்படும்.

     குரகதம் - குளம்புகளினால் நடந்துசெல்வது எனக் குதிரைக்குக்
காரணக்குறி.  பிரளயகாலந்தோறும் அழிந்து படைப்புக் காலந்தோறும் தோன்றி
இவ்வாறு யாற்றுநீர்வெள்ளம்போன்று நித்தியமாயிருத்தலால், 'முடிவில் இப்படி'
என்றார்.  அன்றி, நெடுங்காலம் அழியாது நிற்றலால், உபசாரம்பற்றி இவ்வாறு
கூறினாரெனினுமாம்.  இனி முடிவுஇல் - முடிவு இல்லாத [எல்லை
காணவொண்ணாத மிகப்பெரிய] இப்படி என்றுமாம்.  பின்வரும் 'படைத்தது'
என்பதற்கும், முன்வந்த 'அடி' என்றதே-செயப்படுபொருள்.  குரகதம், மரகதம்,
வர்ணம், பவநம், கதி, முநிவரன், அவயவம் - வடசொற்கள்.          (236)

84.-தேர் பதாதிகளின் வருணனை.

நீடு மால்வரை யடங்கலு நிலைபெறநிற்குமால் வரைமண்மேல்
ஓடு மால்வரை யிவையெனத் தனித்தனியூர்ந்ததேர் பலகோடி
நாடு மால்வரை கடல்வன மெனுநிலனாலுமே யொன்றாகக்
கூடு மால்வரை யில்லெனப் பரந்தனர்கொடியவெம் படைவீரர

     (இ -ள்.) 'நீடும் மால் வரை அடங்கலும் - (உலகத்திலுள்ள) நீண்ட
பெரிய மலைகளெல்லாம், நிலை பெறநிற்கும் மால் வரை - (ஓரிடத்தே)
நிலையாகநிற்கும் பெரியமலைகளாம்; (அவ்வாறன்றி) இவை - இவைகளோ,
மண்மேல் ஓடும் மால் வரை - பூமியின்மீது ஓடுகின்ற பெரிய மலைகளாகும்,'
என - என்று (கண்டோர்) சொல்லும்படி, தனி தனி ஊர்ந்ததேர் -
தனித்தனியே விரைந்துசெல்லுகின்ற தேர்கள், பலகோடி - பல
கோடிக்கணக்கினவாம்; 'நாடு - நாடும் [மருதநிலமும்], மால்வரை -
பெரியமலையும் [குறிஞ்சி நிலமும்], கடல் - கடலும் [நெய்தனிலமும்], வனம் -
காடும் [முல்லைநிலமும்], எனும் - என்று சொல்லப்படுகின்ற, நிலன் நாலுமே -
நான்குவகை நிலங்களும், (இக்காலாட்படைத் தொகுதியால்), ஒன்று ஆககூடும்
- (இனி) ஒன்றுசேர்ந்துவிடும்: ஆல் - ஆதலால், வரைஇல் - (நான்குநிலம்
என்று சொல்வதற்கு உரிய) எல்லை அழிந்துவிடும்,' என - என்று
சொல்லும்படி, (ஒரு பெருங்கூட்டமாக), கொடிய வெம்படைவீரர் -
மிகக்கொடிய ஆயுதங்களையேந்திய காலாள்வீரர்கள், பரந்தனர் - (எங்கும்)
பரவினார்கள்; (எ - று.)

     தேர்கள மலைபோலுள்ளன என்ற கருத்தை, 'நிற்கும் மலைகள் அவை,
இவைகளோ ஓடும் மலைகள்' எனக் கூறினார்.  இவ்வாறு உபமானமாகிய
மலையினும் உபமேயமாகிய தேர்க்குச் செல்லுதலாகிய சிறப்புக்கூறித் தேரினை
மலையாகக்கொண்டு கூறியிருத்தலால், முன்னிரண்டடி சிறப்புருவகவணியாம்.
'இவை' என்பது, தேர்களைச் சுட்டிநின்றது.  கோடி=மிகப்பல என்பதற்கு ஒன்று
காட்டியவாறு.