பக்கம் எண் :

சூதுபோர்ச் சருக்கம் 251

     மருதம் முதலாக நிலங்கள் நால்வகையினவா யிருந்தாலும்
காலாட்படைகள் பெருங்கூட்டமாகத் திரண்டு எங்கும் ஒருசேரப்பரவிச்
செல்லுதலால் அந்நிலங்களின் வேற்றுமை யுணரமுடியாதவாறு எல்லாம்
ஒன்றுபோலவே தோன்றின எனப் பதாதிச்சேனைகளின் மிகுதியைப்
பின்னிரண்டடிகளினால் விளக்கினார்;  உயர்வு நவிற்சியணி.  கொடிய வெம்-
ஒருபொருட்பன்மொழி.  ஐவகை நிலங்களுட் பிராணிசஞ்சார மில்லாத
பாலைநிலத்தை விலக்கி, 'நிலம்நான்கு' என்றார்;  'நானிலம்' என்றே இந்தப்
பூமிக்கு ஒரு பெயரிருத்தலும் காண்க.  நால்வகை நிலங்களும் தம்தம் தன்மை
திரிந்து பாலையாகின்றனவேயன்றி இயற்கையிற் பாலையெனத் தனியே
ஒருநிலமில்லை யென்ப.  நாடு வரை கடல் வனம் என்ற பெயர்ச்செவ்வெண்,
'நால்' என்னுந் தொகை பெற்றது;  இதிலுள்ள உம்மை -முற்றுப்பொருளது.
                                                         (237)

85.-வாச்சியப் பேரொலியின்வருணனை.

அதிர்மு ழக்கின கருமுகி லேழுடையண்டர்கோ னகல்வானுக்கு
எதிர்மு ழக்கென முழங்கினதனித்தனி யின்னிய மிடந்தோறும்
முதிர்மு ழக்கிப மவற்றினு மும்மடிமுழங்கின வவைதாமும்
பிதிர்மு ழக்கென முழங்கினவலம்புரி யுரகரிற் பிழைத்தோர்யார்.

     (இ -ள்.) அதிர் முழக்கின - பேரொலியையுடைய இடி முழக்கத்தைச்
செய்கின்ற, கரு முகில் ஏழ்உடை - கருநிறமான ஏழு
மேகங்களையுடையதாகிய, அண்டர்கோன் அகல் வானுக்கு-தேவர்கட்கெல்லாந்
தலைவனாகிய இந்திரனது அகன்ற வானத்தை, எதிர் முழக்கு என -
எதிர்க்கின்ற ஒலியென்னும்படி, (மேககர்ச்சனையினும் மிக்கனவாக), இன் இயம்
இடந்தோறும் தனித்தனி முழங்கின - இனியவாத்தியங்கள் (சேனைகளின்)
இடங்களிலெல்லாம் வெவ்வேறாகப் பேரொலி செய்தன; முதிர் முழக்கு இபம் -
மிக்க பிளிறுதலையுடைய யானைகள், அவற்றினும் - அவ்வாத்திய
கோஷங்களைப்பார்க்கிலும், மும் மடி முழங்கின - மூன்றுபங்கு அதிகமாக
ஒலித்தன; அவைதாமும் பிதிர் முழக்கு என - அந்த யானையின் பிளிறுதலும்
சிற்றொலி யென்னும்படி, வலம்புரி முழங்கின - வலம்புரிச்சங்குகள்
ஒலிசெய்தன; (இவ்வாறு பேரொலியுண்டானதனால்), உரகரில் பிழைத்தோர் யார்
- நாகலோகத்தாரில் உயிர்தப்பிப்பிழைத்தவர் யாவருளர்? [எவருமில்லை
யென்றபடி]; (எ - று.)

    வாத்தியகோஷத்தை வருணிக்கத் தொடங்கியவர், ஒலியொற்றுமை பற்றி
யானைகளின் பிளிறலையும் உடன்கூறினார்.  முகில் முழக்கத்தினும் மிகுதியாக
வாத்தியங்களும், அவற்றினும் அதிகமாக யானைகளும், அவற்றினும் மிக
அதிகமாக வலம்புரிச்சங்குகளும் முழங்கின என வாச்சியப் பேரொலியின்
மிகுதியை வருணித்தார்;  மேன்மேலுயர்ச்சியணி:  ஒன்றினும் ஒன்று சிறந்த
பலவற்றைச் சேர்த்துக் கூறுதல், இவ்வணியின் இலக்கணம்.  'அதிர்முழக்கின'
என்பதற்கு - (கேட்பவர்கள்) அஞ்சிநடுங்கத்தக்க