பக்கம் எண் :

சூதுபோர்ச் சருக்கம் 252

முழக்கத்தை யுடையனவான என்றும், 'கரு முகில்' என்பதற்கு - கருக்கொண்ட
காளமேகமென்றும், வானுக்கு எதிர் முழக்கு என என்பதற்கு -
'சுவர்க்கலோகத்து வாத்தியவொலிக்குப் பிரதித்தொனி' யென்று சொல்லும்படி
என்றும் பொருள்கூறலாம்.  முகில்ஏழ்-சம்வர்த்தம், ஆவர்த்தம்,
புட்கலாவர்த்தம், சங்கிருதம், துரோணம், காளமுகி, நீலவர்ணம் என்பன.
பிதிர்என்பது - துகள்: அது, இங்கே சிறுமைக்கு ஆயிற்று.  வலம்புரி -
வலப்பக்கமாக உட்சுழிந்திருக்குஞ் சங்கு; இடம்புரிச்சங்கம் ஆயிரம்
சூழப்பெற்றது, இது.  இடியோசைக்கு அஞ்சுதல் சர்ப்பசாதியாரின் இயல்பு
ஆதலால், அவ்விடியோசையினும் பலமடங்கு மிக்க இவ்வாத்தியகோஷத்தைக்
கேட்டு அந்நாகசாதியார் உயிரொடுங்குதல் திண்ண மென்பார், 'உரகரிற்
பிழைத்தோர் யார்' என்றார்.  'வலம்புரி' எனத் தனியே யெடுத்துக்கூறியதனால்,
'இயம்' என்றது - அவை யொழிந்த மற்றவற்றை யென்க.  இபம், உரகர் -
வடசொற்கள்.  'முழக்கு' 'முழங்கின' என்ற சொற்கள் ஒருபொருளிலேயே
பலமுறை வந்தது - சொற்பொருட்பின்வருநிலையணி.      (238)

86.-கொடிச்சீலைகளின் வருணனை.

எடுத்த நீள்கொடி யாடைவானகல்வெளி யெங்கணு
                                      நெருங்கிக்கீழ்ப்,
படுத்த வானமே வானமாய் மறைந்தது மீதுறப்பகிரண்டம்,
அடுத்த பூநதி வானதிக் கிலதென வன்புட னுபகாரங்,
கொடுத்த மீனெனக் கால்பொரப் பரந்துபோய்க் குளித்தன
                                     குளிர்தோயம்.

     (இ -ள்.) எடுத்த நீள் கொடி ஆடை - (அச்சேனையில்) உயர
எடுக்கப்பட்ட கொடிச்சீலைகள்,-வான் அகல் வெளி எங்கணும் நெருங்கி மீது
உற - ஆகாயத்தின் பரந்தவெளியிட முழுவதிலும் நெருக்கமாய் மேலே
பொருந்த, கீழ் படுத்த வானமே வானம் ஆய்-அவற்றிற்குக் கீழே பொருந்திய
ஆகாயம் மாத்திரமே (பூமியிலுள்ளார்க்கு) ஆகாயமாகத் தோன்ற, பகிரண்டம்
மறைந்தது - (இக்கொடிச்சீலைகளின்) மேற்புறத்திற் பொருந்திய ஆகாயம்
(இவ்வுலகத்தார்க்குத் தெரியாது) மறைந்து விட்டது; (இவ்வாறு வானத்தில்
நெருங்கிய கொடிச்சீலைகள்),- 'அடுத்த பூ நதி - (மீன்) பொருந்தியுள்ள
இவ்வுலகத்துக் கங்காநதியானது, வான் நதிக்கு இலது என -
ஆகாசகங்காநதிக்கு (த் தன்னிடத்திலிருப்பது போல மீன்) இல்லையென்று
கருதி, அன்புடன் உபகாரம் கொடுத்த மீன் - அன்புடனே உபஹாரமாக
அனுப்பிய மீன்களாகும்,' என - என்று சொல்லும்படி, கால் பொர பரந்து
போய் - காற்றுவீசுதலினால் (அக்கொடிகள் ஆகாயத்திற்) பரவிச்சென்று, குளிர்
தோயம் - (அவ்வாகாச கங்காநதியினது) குளிர்ந்தநீரில், குளித்தன - படிந்தன;
( எ - று.)

     வானம் - வெற்றிடம்.  கொடிச்சீலைகள் ஆகாயத்திற் காற்றினாற் பரவி
நெருங்கிப் பந்தரிட்டாற்போலாக, அக்கொடிச்சீலை