கட்கு மேற்புறத்திலுள்ள ஆகாயம் நிலவுலகத்தார்க்குப் புலப்படாது கீழ்ப்புறத்திலுள்ள ஆகாயம் மாத்திரமே புலப்படுவதாயிற்று என்பது, முன்னிரண்டடியின் கருத்து. இவ்வருணனை, கொடிகளின் மிகுதியை விளக்குந் தொடர்புயர்வுநவிற்சியணியாம்: பின்னிரண்டடிகளில், வானத்தில் ஆகாசகங்கா நதியளவுஞ் சென்று காற்றினால் மோதப்பட்டு அசையுங் கொடிச்சீலைகள், மீன்களை மிகுதியாகவுடைய பூலோகத்துக் கங்காநதியானது அம்மீன்களை யுடையதல்லாத ஆகாசகங்காநதிக்கு உபஹாரமாக அனுப்பிய மீன்கள் போலு மெனக்குறித்தார்; தன்மைத்தற்குறிப்பேற்றவணி. உபஹாரம் என்றது - பெரியோர்க்குக் கொடுக்குங் காணிக்கைப்பொருள் என்று பொருள்படும்: அது திரிந்துவந்தது. கொடியாடை - த்வஜ படம். மீன் - சாதியொருமை ஆதலால், 'இலது' என்ற ஒருமைமுற்றைக் கொண்டது. அடுத்த பூ நதி - இந்நகரத்தையடுத்துப் பூமியிலுள்ள நதி எனினுமாம். பஹிரண்டம், பூநதி, நதீ, மீநம், தோயம் - வடசொற்கள். (239) 87.-தூளிகளின் வருணனை. அழுந்த மேலிடு சேனையான்மிகவுநொந் தமரருக்குரைசெய்யச், செழுந்த ராதல மடந்தைபொன் னுலகிடைச்செல்லுகின்றதுபோன் மேல், எழுந்த தூளிக ளிடைவிடா தெங்கணுமெழுந்தெழுந் தெதிரோடி, விழுந்த தூளியுந் தடுத்தன நிலனுறவிசும்புறும் படிநின்றே. |
(இ -ள்.) செழுந் தராதலம் மடந்தை - செழிப்புள்ள பூமி தேவியானவள், அழந்த மேல் இடு சேனையால்-(தான்) அழுந்தும்படி மிகுதியாகத் தன்மீதுபொருந்திய சேனைத்தொகுதியினால், மிகவும் நொந்து - மிகவும் வருந்தி, அமரருக்கு உரைசெய்ய - தேவர்கட்கு (த் தன் வருத்தத்தை)க் கூறி முறையிடுதற்காக, பொன் உலகிடை செல்லுகின்றது போல் - பொன்மயமான தேவலோகத்துக்குப் போகின்ற தன்மைபோல, மேல் எழுந்த - மேலே கிளம்பிய, தூளிகள் - புழுதிகள்,- எங்கணும் இடைவிடாது எழுந்து எழுந்து எதிர் ஓடி-எல்லாவிடங்களிலும் இடைவிடாமல் மிகுதியாக எழுந்து மேலே எதிர்முகமாகச்சென்று, விசும்பு உறும்படி நின்று - ஆகாயத்திற்பொருந்தும்படி நின்றுகொண்டு, நிலன் உற விழுந்த தூளியும் தடுத்தன - (அத்தூளிகட்கு முன்னமே ஆகாயத்திற் சென்று மீண்டு) தரையிற்பொருந்தும்படி விழுகிற தூளியையும் (விழவொட்டாது) தடுத்தன; (எ - று.) சேனைகள் மிக்குச்செல்லுதலினால் மேலே புழுதிகள் மிகுதியாக எழுந்ததை, பூமிதேவி மிக்கபாரம் பொறுக்கமாட்டாது தன் குறையை முறையிடுமாறு மேலுலகத்திற்குச்செல்வதாகக் குறித்தார்; தன்மைத்தற்குறிப்பேற்றவணி. மேன்மேலும் மிகுதியாகப் புழுதிகள் எழுந்து மேற்சென்று கொண்டே யிருத்தலினால், |