பக்கம் எண் :

சூதுபோர்ச் சருக்கம் 254

புழுதிகள் மீண்டு விழுவதற்கு இடமில்லாமற் போயிற்றென்க.  இதனால்
சேனையின் மிகுதி தொனிக்கும்.  பூமிதேவி மிக்கபாரத்தினால் வருந்தும்போது
தன்குறையைத் தேவர்களிடத்துச் சென்று முறையிடுதலைப் புராணங்களிற்
காணலாம்.                                                 (240)

88.-சேனைகளுடன்தம்பியர்நால்வரும் நான்குபக்கத்திலும்
வரத் தருமபுத்திரன் புறப்படுதல்.

முன்னர் மாருத மதலையுஞ் சேனையுமுடுகிவன் பொடுபோதப்
பின்னர் வாசவன் மதலையுந்தானையும் பெருந்தக வுடன்போத
அந்த ராதிப ரிருவரு மிருபுறத்தரும்படை யுடன்செல்ல
மன்ன ராதிபன் றாரகாகணத்திடை மதியெனப் புறப்பட்டான்.

     (இ -ள்.) மாருதன் மதலையும் - வாயுகுமாரனான வீமசேனனும்,
சேனையும் - [அவனது] சேனைகளும், முடுகி - விரைந்து, முன்னர் - முன்னே
[முன்னணியாக], வன்பொடு போத - வலிமையுடன் செல்லவும்,- வாசவன்
மதலையும் - இந்திரகுமாரனான அருச்சுனனும், தானையும் - [அவனது]
சேனைகளும், பின்னர் - பின்னே [பின்னணியாக], பெருந் தகவுடன் போத -
பெருந்தகையுடன் [கம்பீரமாகச்] செல்லவும்,- அ நராதிபர் இருவரும் - (நகுல
சகதேவர் என்கிற) அந்த அரசர்களிருவரும், அரும்படையுடன் - (தமது)
அருமையான சேனைகளோடு, இரு புறத்து செல்ல - இரண்டு பக்கங்களிலும்
[புறவணியாகச்] செல்லவும்,- (அவர்கட்குநடுவே),- மன்னர் ஆதிபன் -
அரசர்கட்கெல்லாந் தலைவனான தருமபுத்திரன், தாரகா கணத்திடை மதிஎன -
நட்சத்திரக்கூட்டத்தின் நடுவில் (விளங்குஞ்) சந்திரன்போல, புறப்பட்டான்-;
(எ- று.)

    தருமபுத்திரன் யாவரினும் பிரதானனாய்ச் சிறத்தலால் அவனுக்குச்
சந்திரனையும், மற்றையோர்க்கு நட்சத்திரங்களையும் உவமை கூறினார்;
தம்பியர் நால்வரையும் பெரிய தாரகைகளாகவும், சேனைகளைச் சிறிய
தாரகைகளாகவும் கருதுக.  மாருதன்+மதலை=மாருதமதலை;  "சிலவிகாரமா
முயர்திணை." அம் நராதிபர் என்றுபிரித்து - அழகிய அரசர்களெனவும்
பொருள் கொள்ளலாம்.  நர+அதிபன்=நராதிபன்; தீர்க்கசந்தி பெற்ற வடமொழித்
தொடர்.  நான்காம் அடியில், ஆதிபன்-அதிபன் என்பதன் நீட்டல்.  இனி,
மன் நராதிபன் என்று கொண்டு, பெருமைபெற்ற அரசனென்றலு மொன்று.
தாராகணம் - வடமொழித்தொடர்.                               (241)

89.-அரசமகளிரும் திரௌபதியும்உடன்செல்லுதல்.

அங்கண் மாநிலத் தரசர்தம்மகளிர்பே ரரும்பிடி மிசைபோதச்
செங்கண் மாமயில் யாகபத்தினியும்வண் சிவிகையின் மிசைபோத
வெங்கண் மாமணி முரசுயர்த் தருளியமெய்தவா மொழிவேந்தன்
தங்கண் மாநகர் கடந்துவண்சாயையுந் தபனனு மெனச்சென்றான்.