பக்கம் எண் :

சூதுபோர்ச் சருக்கம் 255

     (இ -ள்.) அம் கண் மா நிலத்து அரசர்தம் மகளிர் - அழகிய
இடமகன்ற பெரிய நிலவுலகத்திலுள்ள ராஜஸ்திரீகள்,  பேர் அரும் பிடிமிசை
போத - பெரிய அருமையான பெண்யானைகளின்மே லேறி உடன் வருமாறு,
செம்கண் மா மயில் யாகபத்தினியும் - செவ்வரிபரந்த கண்களை யுடையவளும்
அழகிய மயில் போன்ற சாயலையுடையவளும் யாகத்திற்கு உரிய
பட்டமகிஷியுமாகிய திரௌபதியும், வள் சிவிகையின் மிசை போத - சிறந்த
தண்டிகையின் மீது ஏறி உடன்செல்ல,-வெம் கண் மா மணி முரசு
உயர்த்தருளிய - (பகைவர்க்குக்) கொடிய கண்களையுடைய பெரிய அழகிய
முரசத்தின் வடிவமெழுதிய கொடியை உயரநாட்டியவனாகிய, மெய் தவா
மொழி வேந்தன் - உண்மை தவறாத சொற்களைச் சொல்பவனாகிய
யுதிஷ்டிரராஜன்,-தங்கள் மா நகர் கடந்து - தங்களது (இந்திரப்பிரத்த)
நகரத்தை விட்டு, வள் சாயையும் தபனனும் என - அழகிய சாயாதேவியும்
சூரியனும் போல, சென்றான்-; (எ - று.)

    அரசர்களையெல்லாம் வென்று பிரதாபத்தினால் விளங்குந்
தருமபுத்திரனுக்குச் சூரியனையும், அத்தருமனைப் பின்பற்றிச் செல்லும்
அவனது மனைவியாகிய திரௌபதிக்கு அச்சூரியனை விடாது
தொடர்ந்துகொண்டே செல்லும் சாயாதேவியையும் உவமை கூறினார்;
கீழ்ச்செய்யுளில் தருமபுத்திரனுக்குச் சந்திரனை உவமை கூறியவர்
இச்செய்யுளிற் சூரியனையும் உவமைகூறியது, "அரசன்
தண்ணளியுடையவனாய்த் தன்னாட்டுக்குடிகளை மகிழ்வித்தலில் அமுத
கிரணங்களினால் உலகத்தாரை மகிழ்விக்குஞ் சந்திரனையும்,
பிரதாபமுடையவனாய்த் தீயோரைக்கடிந்து தருமத்தை நிலைநிறுத்துதலில்
இருளையொழித்து விளக்கத்தை யுண்டாக்கி விளங்குஞ் சூரியனையும்
ஒத்திருத்தல் வேண்டும்"  என்பது அரசநீதியாதலா லென்க.
'அரசர்தம்மகளிர்' என்றது, தருமபுத்திரனுடன் வந்த அரசர்களது மனைவியரை.
மகளிர் பெண்யானை மேலும் சிவிகையின்மேலும் ஏறிச்செல்லுதல், மரபு.
'பத்நீ' - வைதிக காரியங்களில் தனது கணவனுடனிருந்து உதவுபவளென்று
பொருள்படும்;  தருமர் இராசசூயயாகஞ் செய்யும்போது துணைவியா
யிருந்ததனால், திரௌபதியை 'யாகபத்தினி' என்றார்.  சூரியனுக்குச் சாயை,
ஸம்ஜ்ஞை என இருவர் மனைவியர்.  தபநன் - (தனது
ஆயிரங்கிரணங்களாலும்) தபிப்பவன் [காய்பவன்] எனப்பொருள்படும்
வடசொல்.

     பிடி - பெண்யானை;  "பிடியென் பெண்பெயர் யானைமேற்றே" என்பது
தொல்காப்பியம்.  ஆண்யானை 'களிறு' எனப்படும்.  முரசத்திற்கு 'கண்'
என்றது, அடிக்குமிடத்தை.  'தவா' என்னும் ஈறுகெட்ட
எதிர்மறைப்பெயரெச்சத்தில், 'தபு' என்பதன் மரூஉவாகிய தவு - பகுதி.
அங்கண் - அக்கண் என்பதன் மெலித்தல்.                       (242)

வேறு.

90.-தருமபுத்திரனுக்கு நேர்ந்தஅபசகுனங்கள்.

ஏவின பல்லியு மிடத்திலேவரத்
தாவின குக்கிலுந் தருமன்றன்னெதிர்