பக்கம் எண் :

சூதுபோர்ச் சருக்கம் 256

வாவின நெடுங்கலை வரதநூல்வலோர்
ஓவின ருரைக்கவு முணர்கலாமையால்.

     (இ -ள்.) தருமன்தன் எதிர் - தருமபுத்திரனது எதிரில், பல்லியும் -
கௌளிகளும், ஏவின - (துர்நிமித்தமாக ஒலித்துச் செல்லவேண்டாமென்பதைக்
குறிப்பால்) தெரிவித்தன; குக்கிலும் - செம்போத்துக்களும், இடத்திலே வர
தாவின - (வலப்பக்கத்திலிருந்து) (இடப்பக்கத்திலே தாவிச்சென்றன; நெடுங்
கலை-பெரிய கலைமான்கள், வாவின - தாவிக்கொண்டு எதிரிட்டன;  வரதம்
நூல்வலோர் - நன்மையைத்தரக்கூடிய சகுன சாஸ்திரங்களில் வல்ல
நிமித்திகர்கள், உரைக்கவும் - (இவ்வாறு நேரிட்ட தீநிமித்தங்களின்
தன்மையைத் தாம்) எடுத்துச் சொல்லிக்கொண்டிருக்கையிலும்,
உணர்கலாமையால் - (தருமபுத்திரன் அவற்றை) அறிந்து நடவாமையினால்,
ஓவினர் - (அறிவுகூறுதலை) ஒழிந்தார்கள்;  (எ - று.)

    தருமபுத்திரன் தீச்சகுனங்களின் தன்மையைத் தான்
அறிந்தவனாயிருந்தும் நிமித்திகர்கள் அப்பொழுது நேர்ந்த துர்நிமித்தங்களை
யெடுத்துக் கூறவும் அறியாதவன்போன்று சென்றது, தனதுபெரியதந்தையின்
சொல்லை மறுக்கலாகாதென்னுங் கடப்பாட்டினா லென்க.
தீப்பயன்விளைத்தற்கு உரிய இடத்திலிருந்து பல்லிகள் கொட்டியதையே,
பல்லிகள் ஏவினவாகக் குறித்தார்.  பல்லியும் குக்கிலும் - உம்மைகள் முறையே
எதிரதும் இறந்ததுந் தழுவியன.  பின்னர்நேரக்கூடிய நன்மைதீமைகளைச்
சகுனங்களின் மூலமாக முன்னமே அறிந்துகொள்ளுதற்குக்
கருவியாயிருத்தலால், அச்சாஸ்ரதித்தை 'வரதநூல்' என்றார்.  இனி, 'மாக
நூல்வலோர்' என்ற பாடத்திற்கு-ஆகாயத்திற்கிடக்குங் கிரகங்களின்
சஞ்சாரங்களைப்பற்றிக் கூறும் நூலாகிய சோதிடத்தில் வல்லவர்கள் என்பது
பொருள்.  ஓவினர், ஒருவு என்பதன் மரூஉவாகிய.  ஓவு - பகுதி.
உரைக்கவும், உம்மை - உயர்வுசிறப்பு.

     இது முதல் முப்பத்து நான்குகவிகள்-பெரும்பாலும் மூன்றாஞ் சீரொன்று
மாச்சீரும், மற்றைமூன்றும் விளச்சீர்களுமாகிய அளவடி நான்கு கொண்ட
கலிவிருத்தங்கள்.                                         (243)

91.-யாவரும் ஒருசோலையிற்சேர்தல்.

மடந்தைய ரளகமு மாந்தர்மாலையும்
உடைந்துகு கடகரி மதமு முன்னியே
தடந்தொறு முரலளி தமரினண்புறத்
தொடர்ந்துடன் வரவரச் சோலையெய்தினார்.

     (இ -ள்.) தடம்தொறும்-(வழியிலுள்ள) தடாகங்கள்தோறும் முரல் -
(மலர்களில்மொய்த்து) ரீங்காரஞ்செய்கிற, அளி - வண்டுகள்,-மடந்தையர்
அளகமும் - மகளிரது கூந்தலையும், மாந்தர் மாலையும் - ஆடவர்கள்
அணிந்துள்ள மலர்மாலைகளையும், கரிகடம் உடைந்து உகுமதமும் -
யானைகளின் கன்னங்களிலிருந்து