பக்கம் எண் :

சூதுபோர்ச் சருக்கம் 259

அழியாத முதன்மைபெற்ற முல்லைமலர்களின் நறுமணத்தை நுகர்ந்துகொண்டு,
தண் கானம் எய்தினார் - குளிர்ச்சியான முல்லை நிலத்தைச் சேர்ந்தார்கள்;
(எ- று.)

    அரசர்கள் வருகையில் ஆங்காங்குள்ளார் தமக்கு உரிய பொருள்களைக்
காணிக்கையாகக்கொண்டு எதிர்கொள்ளும் மரபின்படி இடையர்கள்
வெண்ணெய் முதலிய முல்லைநிலத்துக் கருப்பொருள்களைக் கொணர்ந்து
எதிர்கொண்டன ரென்க.  (இவ்வாறே காளிதாஸமகாகவியும்-
இடையர்வெண்ணெயைக்காணிக்கையாகக் கொண்டு திலீபராசனை
எதிர்கொண்டாரென ரகுவம்சத்திற் கூறியுள்ளார்.) தடா - பெரும்பானை.
அடா, கொளா - 'செய்யா' என்னும் வாய்பாட்டு உடன்பாட்டு இறந்தகால
வினையெச்சம்.  முடை - பால் வெண்ணெய் இவற்றில் அளைவதனால்
நேர்வது.  ஆய் - சாதிப்பெயர்.  இந்நிலத்திற்கு முல்லைக்கொடி
சிறந்துநிற்றலால், 'படாமுதல்முல்லை' என்றார்.  முல்லை - அதன் மலர்க்கு
முதலாகுபெயர்.  முல்லை நிலம் - காடும், காடுசார்ந்த இடமும்.  படா -
ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்.  கடாம் - கடம் என்பதன் நீட்டல்.
'கடம்' என்னும் கன்னத்தின்பெயர் அதனினின்று பெருகும் மதநீர்க்கு -
இடவாகுபெயர்.  'கடாமலை' எனவே, யானையாயிற்று;  அடையடுத்த
உவமவாகுபெயர்.  'கடாமலையைவர்' என்றும் பாடம்.               (247)

95.-இதுமுதல் மூன்றுகவிகள் -முல்லை நிலத்து
நிகழ்ச்சியைக் கூறும்.

தேனினஞ் செறிதரு தெரியல்வேலினான்
தானிரங் கருண்மிகு தருமனாதலாற்
கானிலங் குறைதரு கலைக ளோடிள
மானினம் பேர்கலா மருங்குவைகுமால்.

     (இ -ள்.) தேன் இனம் செறிதரு தெரியல் வேலினான் - வண்டுகளின்
கூட்டம் நெருங்கி மொய்க்கப்பெற்ற மலர்மாலையை யணிந்தவனும்
வேலாயுதத்தை யுடையவனுமாகிய யுதிஷ்டிரராஜன், தான்-, இரங்கு அருள் மிகு
தருமன் ஆதலால் - (உயிர்களிடத்து) இரங்குகின்ற கருணைமிக்க
தருமமுடையவனாதலால்,-கானில் அங்கு உறைதரு கலைகளோடு -
அங்குக்காட்டில் வசிக்கிற ஆண்மான்களுடனே, இள மான் இனம்-இளம்
பெண்மான்களின் கூட்டம், பேர்கலா - (அஞ்சிப்) பெயர்ந்து
அப்பாற்செல்லாமல், மருங்கு வைகும் - (அத்தருமனது) சமீபத்திலேயே
நிற்கும்; (எ - று.)-ஆல் - அசை.

    யமதருமராசனது புதல்வனாதல்பற்றி யுதிஷ்டிரனுக்கு வழங்கும் 'தருமன்'
என்ற பெயர்க்கு, 'தருமமுள்ளவன் என வேறொரு காரணப் பொருள்
கற்பித்துக்கூறியது - பிரிநிலைநவிற்சியணியின் பாற்படும்.  'தருமபுத்திரனும்
அவன் வழிபட்டு நடக்குஞ் சேனைகளும் பிராணிகளைக்கொல்லாத
நல்லியல்புடைமையை மிருகங்களும் அறிந்தன' என்று தருமபுத்திரனது
அருட்சிறப்பை