விளக்கினார்: ரகுவம்சத்தில், காளிதாசமகாகவியும், 'திலீபனது தேரைப் பார்த்துக்கொண்டே மான்கள் வழியின் அருகிலேயே நின்றன' எனக் கூறியமை காண்க. எளிதில்மருளுந் தன்மையன வாதல்பற்றி மான்களை எடுத்துக் கூறினார். தெரியல்-விளங்குதல்; விளங்குகின்ற மாலைக்குத் தொழிலாகுபெயர். வேல் - மற்றை ஆயுதங்கட்கும் உபலக்ஷணம். சிவபெருமானுக்கும், யமனுக்கும், முருகக்கடவுட்கும் வேல் ஆயுத மாதலால், அது, கவிகளாற்சிறப்பாக எடுத்து உரைக்கப்படும். கலை-ஆண்மான். பேர்கலா - ஈறுகெட்ட எதிர்மறை வினையெச்சம்; முற்றெச்சமெனினும் இழுக்காது. (248) | 96. | செருவிளங் காளையர்சேனை யின்றிறம் வெருவிளம் பொதுவியர்விழைந்து காண்பபோல் மருவிளங் கிதழிநீள் வனமுமாமலர்க் கருவிளங் கண்கொடு கலந்துகண்டவே. |
(இ -ள்.) செரு இளங் காளையர்-போரிற்சிறந்த இளவெருது போன்ற பாண்டவர்களது, சேனையின் திறம் - சேனையின் திறம் - சேனையின் வகையை, வெருவு இளம் பொதுவியர் விழைந்து காண்ப போல் - அஞ்சுந்தன்மையுள்ள இளமையையுடைய இடைச்சியர்கள் விரும்பிக் காண்பதுபோல,-மரு விளங்கு இதழி நீள் வனமும் - வாசனையோடு கூடிவிளங்குகின்ற கொன்றைமரங்கள் (நிறைந்த) பெரிய காடுகளும் [முல்லைநிலமும்], கருவிள மாமலர் கண் கொடு - காக்கணஞ் செடியினது பெரிய மலர்களாகிய கண்களைக் கொண்டு, கலந்து கண்ட - பொருந்திப் பார்த்தன; (எ - று.) பாண்டவர்கள் சேனையுடன் சென்ற முல்லைநிலத்திலே காக்கணம் பூ மலர்ந்துள்ளதை, கொன்றை மரங்கள் அடர்ந்த அந்த முல்லைநிலம் தனது கண்களால் அச்சேனையின் திறத்தை நோக்குவதாகக் குறித்தார்: தற்குறிப்பேற்றவணி. இவ்வணி 'கருவிளமா மலர்க்கண்' என்ற உருவகவணியைஅங்கமாகக் கொண்டுவந்தது. முன்னிரண்டடி - உவமையணி. 'இனி' 'இதழிநீள்வனம்' என்பதைக் கொன்றைமரக்காடு என்றே கொண்டு, 'அந்நிலத்திலுள்ள இடைச்சியர்கள் அச்சத்தால் மரங்களில் மறைந்து நின்று சேனையின் திறத்தைக் காண்பதுபோல, கொன்றை மரங்களும் கருவிளஞ்செடியோடு சேர்ந்து நின்று அக்கருவிளமலராகிய கண்களினால் நோக்கின' என்று கருத்துக் கூறுவாருமுளர்; அக்கருத்தில் உபமான உபமேயங்கள் நன்கு இயையாமையை உய்த்துணர்க. கருவிளமலர் கண்களுக்கு உவமையாதலை "புல்லியகொம்புதானோர் கருவிளைபூத்ததேபோ, லொல்கியோர் கொம்புபற்றி யொருகணால் நோக்கி நின்றாள்" என்னுஞ் சிந்தாமணியாலும் அறிக. காளையர்- உவமைபற்றிவந்தபெயர்: இது ஆகுபெயரன்று: 'அர்' என்ற பலர்பால் விகுதியைப்பெற்றுவந்ததனால். மருதத்திற்கும் குறிஞ்சிக்கும் இடையிலுள்ளதனால், அந்நடுநிலமான முல்லை நிலத்தில் வாழ்கிற சாதியர்க்கு, 'இடையர்' என்றும், 'பொதுவர்' என்றும் பெயர்களாயின; இடை, பொது என்பவை- |