| இதனால், பாண்டவர்கள் மலையும் மலைசார்ந்த இடமுமாகிய குறிஞ்சி நிலத்தையடைந்தமையைக் கூறினர். மன்னவர்க்கெலாந் தினகரன் = ராஜ மார்த்தாண்டன்; கிரகங்களுட் சூரியன் ஒளியினால் மிக்குவிளங்குதல்போல அரசர்களுள் தருமபுத்திரன் பெரும்புகழுடன் விளங்குவ னென்க. திநகரன் - (தனதுசேர்க்கையாற்) பகலை யுண்டாக்குபவன். தனிதம்-ஸ்தநிதம்: மேககர்ச்சனை. சாரல் - சார்ந்த இடத்திற்குத் தொழிலாகுபெயர். (251) 99.-இதுமுதல் மூன்றுகவிகள் -குறிஞ்சிநிலத்து நிகழ்ச்சியைக் கூறும். குன்றுறை கடகரிக் குழாங்கள்சேனையின் ஒன்றிய களிறுகண்டுட்கி யோடின துன்றிய புறவிபச் சுவடுகண்டுடன் சென்றில வெகுண்டிவன்சேனை யானையே. |
(இ - ள்.) குன்று உறை - மலைகளிலே வசிக்கின்ற, கட கரி குழாங்கள்- மதயானைகளின் கூட்டங்கள், சேனையின் ஒன்றிய களிறு கண்டு - (தருமபுத்திரனது) சேனையிலே திரளாகப்பொருந்திய யானைகளைப் பார்த்து, உட்கி - அச்சங்கொண்டு, ஓடின-; இவன் சேனை யானை - இந்தத் தருமபுத்திரனது சேனையிலேயுள்ள யானைகள், துன்றிய புறம் இபம் சுவடு கண்டு-நெருங்கிய வேற்று யானைகளின் அடிச்சுவடுகளைப் பார்த்து, வெகுண்டு - கோபங்கொண்டு, உடன் சென்றில - (சேனைகளோடு) தொடர்ந்து செல்லாது தனிப்பட்டன; (எ - று.) நாட்டுயானைகளும் காட்டுயானைகளும் ஒன்றையொன்று கண்டபொழுது பகைக்குந் தன்மையவாதலால், நாட்டு யானைகள் கூட்டமாகவரக்கண்டு காட்டுயானைகள் ஓடுதலும் அக்காட்டு யானைகளின் அடிவைப்புக்களைக் கண்டு நாட்டுயானைகள் வெகுண்டு சேனையோடு செல்லாமையும் நிகழ்ந்தன வென்க. மலை யானைகள் அஞ்சியோடின வென்றதனால், தருமன் சேனையானைகள் அக்காட்டு யானைகளினும் வலியன வென்பது போதரும். புறவு இபம் என்றுபிரித்து-குறிஞ்சிநிலத்து யானைகள் என்று பொருள் கூறினும் பொருந்தும். இனி ஒருசாரார் இச்செய்யுட்கு வேறு வகையாகக் கருத்து வருணிக்குமாறு:- குன்றுறை கடகரிக் கூட்டங்கள் தருமனது யானைகளைக்கண்டு வெருவி யோடி விட்டன; அந்தயானைகளினுடைய அடிகளழுந்திய சுவடுகள் புறங்காட்டிய சுவடுகளாயிருந்தமையால், அஞ்சி முதுகிட்ட அவைகளைத் தொடர்ந்து பின்போதல் வீரமன்றெனக் கருதித் தருமனது யானைகள் போகாது நின்றுவிட்டன; இதனால், வெருவிப்புறங்கொடுத்த வேந்தரைத் தருமன் முதலாயினோர் தொடராரென்பது நன்கு வலியுறுத்தப்பட்டு, அன்னோர் வீரத்தையும் மேன்மையையும் விளக்குமென்பது. யானை - குறிஞ்சி நிலக்கருப்பொருள். இபம் - வடசொல். சென்றில - எதிர்மறை யிறந்த காலப்பலவின்பால்வினைமுற்று. (252) |