| 100. | வாளியின் வரும்பரி மாவின் வண்குரத் தூளிகள் விசும்புறத்துன்றி யோங்கலால் ஆளிகள் சிகரமென்றதிர்ந்து பாய்வன மீளியர்வேலின்வாய் வீழ்ந்து மாய்ந்தவே. |
(இ -ள்.) வாளியின் வரும்-அம்புபோல விசையாய்வருகின்ற, பரிமாவின் - குதிரைகளினது, வள் குரம்-அழகிய குளம்புகளினால் எழுப்பப்படுகின்ற, தூளிகள் - புழுதிகள், விசும்பு உற துன்றி ஓங்கலால் - ஆகாயத்திற் பொருந்த நெருங்கியெழுவதனால்,- ஆளிகள் - (மலையில்வசிக்கின்ற) சிங்கங்கள், சிகரம் என்று-(திரண்டெழுந்த அத்தூளிகளைத் தாங்கள் பாய்ந்து செல்வதற்குஉரிய) மலைச் சிகரமென்று எண்ணி, அதிர்ந்து பாய்வன - கர்ச்சித்துக் கொண்டு பாய்வனவாய், மீளியர் வேலின் வாய் வீழ்ந்து மாய்ந்த - (அத்தூளிகளால் மறைக்கப்பட்டுநின்ற) சேனாவீரர்கள் கையிலேந்திய வேலாயுதத்தின் முனையில் விழுந்து (தாமே) இறந் தொழிந்தன; (எ - று.) - இதனால், ஆராய்ச்சியின்றி மனம்போன படி தொழில்செய்பவர் கேடுறுவரென்பது, தோன்றும். குதிரைகள் மிக்கவிரைவுடன் நேராய்ச்செல்வதற்கு, அம்பு உவமையாம். பரிமா- இருபெயரொட்டுப் பண்புத்தொகை. ஆளி - யாளியென்பதன் மரூஉ: இதற்குச் சிங்கமென்று பொருள் கொள்வதன்றி, யானையைக் கொல்லவல்லதும் துதிக்கையையுடையதுமாகிய, ஓர்மிருகவிசேடமெனக் கூறுவதுமுண்டு. யாளி - குறிஞ்சிநிலக்கருப்பொருள்களிலொன்று. குரம், தூளீ, ஸிகரம் - வடசொற்கள். பாய்வன - முற்றெச்சம். மீளி - ஆண்பாற் சிறப்புப்பெயர். மாய்ந்த - 'அன்' சாரியை பெறாத பலவின்பால் வினைமுற்று. குதிரைகளின் காற்குளம்பினால் உயர வெழுந்த தூளிகளை யாளிகள் மலைச்சிகரமென்று மயங்கிய வெனக்கூறியது-மயக்கவணி. அச்சேனை வீரர்களேந்திய வேற்படைகள் சிங்கத்தை எளிதில் மாய்க்குமாறு மிக்க கூர்மையுடையனவென்பது, ஈற்றடியில் விளங்கிற்று. (253) | 101. | கார்தவழ் கொடுமுடிக்கான மால்வரை வார்தவழ் முலையர மாதாரார்செவி தார்தவழ் தடம்புயத்தரணி மன்னவர் தேர்தவ ழோதையிற்செவிடு பட்டவால். |
(இ -ள்.) கார் தவழ் கொடுமுடி - மேகங்கள் தவழ்ந்துசெல்லப்பெற்ற சிகரங்களையுடைய, கானம் மால் வரை - காடுகள் சூழ்ந்த பெரிய மலைகளிலே வசிக்கின்ற, வார் தவழ் முலை அரமாதரார் - கச்சையணிந்த தனங்களையுடைய அரமகளிரது, செவி-காதுகள்,- தார் தவழ் தடம்புயம் - மாலைகள் அசையப்பெற்ற பெரிய தோள்களையுடைய, தரணிமன்னவர் - நிலவுலகத்து அரசர்களது, தேர் - தேர்கள், தவழ் - விரைந்து செல்லுதலினா லுண்டான, ஓதையின் - பேராரவாரத்தினால், செவிடுபட்ட-செவிடுகளாயின; (எ - று.)- ஆல் - ஈற்றசை. |