ஐவரும் பிறருமாகிய அரசர்களது தேர்கள் ஓடும்போது தோன்றிய பேரோசையினால், மலையரமகளிரது செவிகள் செவிடாயினவென்க; தொடர்புயர்வுநவிற்சியணி. மிக்க பேரோசையினாற்காதுகள் செவிடுபடுதல், இயல்பு. அரமாதர்-அமரமாதர் அல்லது அரம்பை+மாதர் என்பதன் விகாரம். வரையரமகளிர் - மலையில் வசிக்குந் தெய்வப் பெண்கள். (254) 102.-தருமபுத்திரன் சேனையுடன்நெய்தனிலத்தைச் சேர்தல். வரைநிலங் கழிந்தெறி மகரவாரிதித் திரைநிலம் புகுந்தனன்சேனை சூழ்வரப் புரைநிலங் கடந்தறம் புரியுநீர்மையான் உரைநிலங் கடந்தசீருரைகொள் பேரினான். |
(இ -ள்.) புரை நிலம் கடந்து - குற்றத்திற்கு (த் தான்) இடமாவதை நீங்கி [குற்றமற்றவனாய்], அறம் புரியும் - தருமத்தையே செய்கின்ற, நீர்மையான் - தன்மையுடையவனும், உரை நிலம் கடந்த சீர் உரை கொள் பேரினான் - வாக்கின் எல்லைக்கு அடங்காத [வாயினால் அளவிட்டுச் சொல்லமுடியாத] சிறந்த புகழ் மொழியைக்கொண்ட பெரும் பேரை யுடையவனுமாகிய தருமபுத்திரன்.-சேனை சூழ்வர-சதுரங்க சேனைகளும் (தன்னைச்) சூழ்ந்துவர, வரை நிலம் கழிந்து - குறிஞ்சி நிலத்தைவிட்டு நீங்கி, எறி திரை மகரம் வாரிதி நிலம் - மோதுகின்ற அலைகளையும் சுறா மீன்களையுமுடைய கடலைச் சார்ந்ததான (நெய்தல்) நிலத்தில், புகுந்தனன் - பிரவேசித்தான்; (எ - று.) வாரிதி - நீர்தங்குமிடமெனக் கடலுக்குக் காரணக்குறி; வடசொல். சுறாமீன்கள் கடலிலேயே வாழ்வன;'மகராலயம்' எனக்கடலுக்கு ஒரு பெயரிருத்தலுங் காண்க. கடலும், கடல்சார்ந்த இடமும் - நெய்தல். (255) 103.-தருமன்நெய்தனிலச்சிறப்பை நோக்குதல். ஒளிநலந் திகழ்வளை யுறங்குநன்னிழற் களிநறுஞ் சுரும்பிமிர் சுண்டல்வேலிசூழ் புளினமுங் கானலும் பொற்பநோக்கினான் நளினமும் புறந்தரு நயனவேந்தனே. |
(இ -ள்.) நளினமும் புறந்தரும் நயனம் - செந்தாமரை மலரும் [அழகிற்குத்தோற்றுப்] பின்னிடும்படியான [தாமரையினும் மிக அழகிய] கண்களையுடைய, வேந்தன் - யுதிஷ்டிரராசன்,- ஒளி நலம் திகழ் வளை உறங்கும் நல்நிழல் - மிக்கவொளி விளங்குகின்ற சங்குகள் தூங்கப்பெற்ற நல்ல நிழலையுடையனவும், களி சுரும்பு இமிர் - (தேனுண்டதனாற்) களித்தலையுடைய வண்டுகள் ரீங்காரஞ்செய்து மொய்க்கப்பெற்றவுமாகிய, நறும் |