கண்டல் - வாசனையையுடைய தாழை மரங்கள், வேலி சூழ்-வேலி போற் சூழப்பெற்ற, புளினமும்-மணற்குன்றுகளையும், கானலும்-கடற்கரைச் சோலைகளையும், பொற்பு நோக்கினான்-இனிமையாகப் பார்த்தான்; (எ - று.) சங்கு, தாழை, மணற்குன்று, கானல் - இவை, நெய்தனிலத்திற்கு உரியன. வளை - உட்சுழிந்திருப்பது எனச் சங்குக்குக் காரணக்குறி. நளினமும், உம் - உயர்வுசிறப்பு. கண்களுக்குச் செந்தாமரைமலருவமை, செம்மை மென்மை அழகுகளில். (256) 104.-கடலொலியின் வருணனை. பெருங்கட மலைக்குலம்பெயர்த்தும் வந்தன மருங்கடர் பேரணை வகுக்கவேயெனா இருங்கட களிறுதே ரெண்ணில்சேனைகண்டு அருங்கடல் வாய்திறந் தலறியார்த்ததே. |
(இ -ள்.) அருங் கடல் - (அளவிடுதற்கு) அருமையான சமுத்திரமானது,- இருங் கடம் களிறு தேர் எண் இல் சேனை கண்டு - பெரிய மதயானைகளையும் தேர்களையுமுடைய கணக்கில்லாத (தருமபுத்திரனது) சேனையைப் பார்த்து,- 'மருங்கு அடர்பேர் அணைவகுக்க - தன்னிடத்தே நெருங்கிய பெரிய சேதுவைக் கட்டுவதற்காக, பெருங் கடம் மலைகுலம் பெயர்த்தும் வந்தன - பெருங்காடுகளையுடைய மலைகளின் கூட்டம் மீண்டும் வந்துள்ளன,' எனா - என்றுகருதி, வாய்திறந்து அலறி ஆர்த்தது - வாய்விட்டுக் கதறிப் பேரொலிசெய்தது; (எ - று.) தருமபுத்திரனது சேனையிலுள்ள யானைகளையும் தேர்களையும் கண்டு, கடல், மீண்டும் தன்னைத் தூர்த்து அணைகட்டுதற்கு மலைகள் வந்தனவெனக் கருதிக் கதறியழுத தென்க. கடல் இயல்பாகப் பேரொலிசெய்வதை, தன்மீது அணைகட்டுவதாக வெண்ணிக் கதறியதெனக் கூறியது, ஏதுத்தற்குறிப்பேற்றவணி; இவ்வணி, களிறுகளையும் தேர்களையும் மலைகளென்று கருதியதாகிய மயக்கவணியை அங்கமாகக் கொண்டு வந்தது. பெருந்தோற்றத்தினால் யானைகட்கும் தேர்கட்கும் மலை உவமையாம். இராமபிரான் முன்னாளிற் சேனைகளைக்கொண்டு கடலிற் சேது பந்தனஞ்செய்ததை நினைத்து, 'பெயர்த்தும்' என்றார். முதலடியில், கடம் - காடு. இரண்டாமடியில், ஏகாரம் - தேற்றம்; நான்காமடியில், ஏகாரம் ஈற்றசை. எனா - 'செய்யா' என்னும் வாய்பாட்டு உடன்பாட்டு இறந்தகால வினையெச்சம். (257) 105.-அங்குச் சேனாவீரர்கள்உண்டாடுதல் முதலியன. நன்னெடுந் துறையெலா நாளிகேரமோடு இன்னெடும் பனங்கனி யெடுத்தருந்தினார் |
|