பக்கம் எண் :

சூதுபோர்ச் சருக்கம் 266

புன்னையின் புதுமலர் புனைந்துகைதையின்
மென்னிழல் வைகினார் விலாசவீரரே.

     (இ -ள்.) விலாசம் வீரர் - உற்சாகமாயிருக்குந் தன்மையுள்ள சேனா
வீரர்கள்,-நல் நெடுந் துறை எலாம் - (அந்நெய்தனிலத்திலுள்ள) நல்ல பெரிய
நீர்த்துறைகளிலெல்லாம், நாளிகேரமோடு - (மிகுதியாகவிருக்கின்ற)
தேங்காய்களையும், இன் நெடும் பனங்கனி - இனிய பெரிய பனம்
பழங்களையும், எடுத்து-, அருந்தினார்-புசித்தார்கள்; புன்னையின் புதுமலர்
புனைந்து-புன்னைமரத்தினது புதிய [அன்று மலர்ந்த] பூக்களை (க்கொய்து)
சூடி, கைதையின் மெல் நிழல் வைகினார் - தாழைமரங்களின் இனியநிழலிலே
தங்கி இளைப்பாறினார்கள்; (எ - று.)

    'அருந்தினார்' என்றதனால் உண்டாட்டும், 'மலர்புனைந்து' என்றதனால்
பூக்கொய்தலும் கூறப்பட்டன.  நீரும் மணலும் நிறைந்துள்ள இடங்களில்
தெங்கு செழித்துவளருந் தன்மையது.  தெங்கு, பனை, புன்னை, தாழை -
நெய்தனிலக் கருப்பொருள்கள்.  நாளிகேரம் என்ற தற்சம வடசொல்,
அப்பாஷையில் மரத்தையேயன்றி அம்மரத்தின் காய்களையுங் குறிக்குமாதலால்
இங்கு ஆகுபெயரன்று.  இயற்பெயரேயாம்: பனை+கனி=பனங்கனி;
வேற்றுமையில் ஈற்று ஐகெட்டு அம்முச்சாரியை பெற்றது; (நன்: உயிர் - 52.)
விலாஸவீரர் - வடசொற்றொடர்.                           (258)

106.-பாண்டவர்கள்அத்தினாபுரியை நெருங்குதல்.

நாநலம் புனல்கெழு நாடுங்கானமும்
ஏனலம் புனக்கிரி யிடமுநெய்தலங்
கானலு மிவ்வகை கடந்துகாவலன்
தூநலந் திகழ்பதி தோன்றவெய்தினார்,

     (இ -ள்.) (பாண்டவர்கள்),-நா நலம் புனல்கெழு நாடும் - நாவுக்கு
இனிமையான நீர்நிறைந்த மருத நிலத்தையும், கானமும்-முல்லை நிலத்தையும்,
அம் ஏனல் புனம் கிரி இடமும் - அழகிய தினைக்கொல்லைகளையுடைய
குறிஞ்சி நிலத்தையும், அம் கானல் நெய்தலும் - அழகிய
கடற்கரைச்சோலைகளையுடைய நெய்தனிலத்தையும், இ வகை கடந்து -
இவ்வாறே தாண்டிச்சென்று,-காவலன் தூ நலம் திகழ் பதி தோன்ற -
துரியோதனராசனது பரிசுத்தமாகிய அழகுமிக்க அத்தினாபுரி எதிரிற்காணப்பட,
எய்தினார் - அருகிற்சேர்ந்தார்கள்; (எ - று.)

     கீழ்ப் பலசெய்யுள்களில் வகுத்துக்கூறியதை, இச்செய்யுளில் முதல்
மூன்றடிகளால் தொகுத்துக்கூறினார்.  'தண்ணந்துறைவன்'
என்னுமிடத்திற்போல, 'ஏனலம்புனம்' 'நெய்தலங்கானல்' என்னுமிடங்களில்,
அம்-சாரியை யெனினுமாம்.  ஏனல்-குறிஞ்சி நிலக்கருப்பொருள்.  கிரியிடம்-
மலை சார்ந்த இடம்; எனவே குறிஞ்சியாயிற்று.  கிரி-வடசொல்.      (259)