107.-பாண்டவர்கள்அந்நகரத்தின் புறச்சோலையில் தங்குதல். அத்தினா புரிதனக் கருகு வால்வளை முத்தின நிலவெழ முகைக்குந்தாமரைத் தொத்தின பொய்கையுஞ் சுரும்பறாமலர்க் கொத்தின சோலையுங் குறுகிவைகினார். |
(இ -ள்.) (பாண்டவர்கள்), - அத்தினாபுரி தனக்கு அருகு - அத்திநபுரிக்குச் சமீபத்தில், - வால் வளை முத்து இனம் நிலவு எழவெண்மையான சங்குகள் ஈன்ற முத்துக்கூட்டங்களினால் நிலாவொளி யுண்டாக, (அதனால்), முகைக்கும் - (பகலில்) குவியுந் தன்மையுள்ள, தாமரை தொத்தின - தாமரைமலர்களின் கூட்டங்களையுடைய, பொய்கைஉம் - தாடகத்தையும்,- சுரும்பு அறா மலர் கொத்தின சோலைஉம் - வண்டுகள் நீங்காத பூங்கொத்துக்களையுடைய சோலையையும், குறுகி - கிட்டி, வைகினார் - தங்கினார்கள்; (எ - று.) பாண்டவர்கள் தாமரைத் தடாகங்களையுடைய புறநகர்ச், சோலையில் தங்கின ரென்றவாறு. முத்துக்களின் ஒளியை நிலவொளியாகக்கருதிப் பகற்காலத்திலுமுட்படத் தாமரைமலர் குவிந்து நிற்குமென்றது - மயக்கவணி. தாமரைமலர் சூரியனைக் கண்டால் மலருமெனவும், இரவில் சந்திரனைக் கண்டால் குவியுமெனவுங் கூறுதல், கவிசமயம். மலர்ந்த பின்னும் கூம்புதல், நீர்ப்பூக்களின் இயல்பு. இங்கு, முத்துக்கள் - சங்கினின்று உண்டானவை. "தந்தி வராகமருப் பிப்பி பூகந் தழை கதலி, நந்து சலஞ்சல மீன்றலை கொக்கு நளின மின்னார், கந்தரஞ் சாலி கழை கன்னலாவின்பல் கட்செவி கா, ரிந்து வுடும்பு கராமுத்தமீனு மிருபதுமே" என்பதனால், முத்துப்பிறக்குமிடங்கள் இன்னவையென அறிக. தொத்தின கொத்தின - குறிப்புப்பெயரெச்சங்கள். அறா - ஈறுகெட்ட எதிர்மறைப்பெயரெச்சம். (260) 108.-குதிரைகள்இளைப்பாறுதலும், யானைகள் கட்டப்படுதலும். மொட்டின பருமணி முடிகொ டேர்ப்பரி வெட்டின பரிகளும் வெம்மையாறின மட்டின பரிமள மரங்கள்யாவையும் கட்டின கழைபொரு கவள யானையே. |
(இ -ள்.) மொட்டின - மொட்டென்னும் உறுப்பையுடையனவாய், பரு மணி முடி கொள் - பருத்த மணிகளிழைத்துச் செய்யப்பட்ட சிகரத்தைக் கொண்டுள்ள, தேர் - தேர்களிற்கட்டிய, பரி - குதிரைகளும், வெட்டின பரிகளும் - (தேரிலே கட்டப்படாமல்) வேறாக வந்த (ஏறு) குதிரைகளும், வெம்மை ஆறின - (நடந்துவந்ததனாலுண்டான) வெப்பம் [இளைப்புத்] தீர்ந்தன; கழைபொரு - மூங்கிலினாலாகிய குத்துக்கோலைச் சீறுந்தன்மையனவான, கவளம் |