பக்கம் எண் :

சூதுபோர்ச் சருக்கம் 268

யானை - கவளத்தையுண்ணும் யானைகள்,-மட்டின பரிமளம் மரங்கள்
யாவையும் - தேனையுடையனவாகிய நறுமணமுள்ள மரங்களிலெல்லாம்,
கட்டின - கட்டப்பட்டன; (எ - று.)

     மொட்டு - தாமரைமலரின் வடிவமாகச்செய்து தேரின்முன்னிடத்து
வைக்கப்படுவதோ ருறுப்பு; இதனைக் கொடிஞ்சியென்று கூறுதலுமுண்டு.  முடி
- (தேரின்) தலையிடம்.  இனி, 'தேர்ப்பரிவெட்டின பரிகளும் வெம்மையாறின'
என்பதற்கு-தேர் - தேரினின்று, பரி - குதிரைகள், வெட்டின -
அவிழ்க்கப்பட்டன; பரிகளும் - (தேரினின்று அவிழ்க்கப்பட்டனவும் தனியே
மனிதர்கள் ஏறிச்செலுத்தினவுமான) குதிரைகளெல்லாம், வெம்மையாறின
என்றும் பதவுரை கூறலாம்.  மட்டு - தேன்.  தேவதாரு சந்தனம் முதலிய
நறுமணமுள்ள மரங்களில் யானைகளைக் கட்டுதல் மரபாதலால், 'பரிமள
மரங்கள் யாவையும் கட்டின............யானை' என்றார்; "தேவதாரத்தும் சந்தினும்
பூட்டின சிலமா" என்றார் பிறரும்.  கட்டின - செயப்பாட்டுவினைப்பொருளில்
வந்த செய்வினை; செயப்படுபொருளைச் செய்ததுபோலக் கூறியது. கழைபொரு
யானை - "பரிக்கோல் யாவுந் தூரத்தே, காணினு நின்று கொதிப்பது" என்பர்
மேலும். கவளம் - கபளம்; யானையுணவு; வடசொல்.                (261)

109.-யாவரும் இளைப்பாறுதல்.

தரித்தனர் வீரருந் தத்த மாதரும்
சரித்தன சும்மைக டங்குபண்டியும்
பரித்தன நன்னிறப் படங்குவீடுகள்
விரித்தன ரிடந்தொறும்வேந்த ரெய்தினார்.

     (இ -ள்.) வீரரும் - சேனாவீரர்களும், தம் தம் மாதரும்-
அவரவர்களுடைய மனைவியர்களும், தரித்தனர் - இளைப்பாறினார்கள்;
சும்மைகள் தங்கு பண்டியும் - பாரங்களையேற்றியுள்ள வண்டிகளும், சரித்தன
- சாய்த்துவிடப்பட்டன; வேந்தர்-அரசர்கள்,-இடம் தொறும் -
(அச்சோலையின்) பலவிடங்களிலும், நல் நிறம் பரித்தன படங்கு வீடுகள்
விரித்தனர் - அழகிய நிறங்களைப் பெற்றுள்ளனவான கூடாரமாகிய வீடுகளைப்
பரப்பியமைத்துக் கொண்டவர்களாய், எய்தினார் - (அவற்றிற்) சேர்ந்து
தங்கினார்கள்; (எ - று.)

     பண்டிகள் சரித்தல் - இழுக்கும் பிராணிகளை யவிழ்த்து நுகம் தரையிற்
படும்படி பண்டிகளைச் சாய்த்துவிடுதல்; இனி, சரித்தன - சுமைகளை யிறக்கப்
பெற்றன எனவுங் கூறலாம்.  சும்மை = சுமை: விரித்தல்.  அரசர்கள்
வேற்றுநாட்டுக்குச் செல்லும்பொழுது ஆங்காங்குத் தங்கி வசிக்கும்படி
வஸ்திரங்களினால் மாளிகைகள்போல அறைகள் முதலியன அமைத்துக்
கூடாரங் கட்டிக்கொள்ளும் மரபு, பின்னிரண்டடிகளிற் கூறப்பட்டது.
விரித்தனர் - முற்றெச்சம்.                                     (262)