பக்கம் எண் :

சூதுபோர்ச் சருக்கம் 269

110.- பாண்டவரைவரும்இளைப்பாறுதல்.

கைவரு தண்டுடைக் காளைவெஞ்சிலை
தைவரு செங்கையான் றாரைவெம்பரி
மெய்வரு குமரன்வேல்விடலை வேந்தனோடு
ஐவரு மமர்ந்தன ராண்மையேறனார்.

      (இ - ள்.) கை வரு தண்டு உடை காளை - கையிற்பிடித்த
கதாயுதத்தையுடைய இளவெருதுபோன்றவனாகிய வீமனும், வெம்சிலை தைவரு
செம் கையான்  - கொடிய வில்லைப்பிடித்த சிவந்த கையையுடையவனான
அருச்சுனனும், தாரை வெம் பரி மெய் வரு குமரன் - ஐவகை
நடைகளையுடைய வேகமுள்ள குதிரையை நடத்துவதில் உண்மையான
அறிவுபொருந்திய இளவீரனாகிய நகுலனும், வேல் விடலை - வேலாயுதத்தைத்
தாங்கிய சகதேவனும், வேந்தனோடு - யுதிஷ்டிரராஜனும், (ஆகிய), ஆண்மை
ஏறு அனார் ஐவரும் - வீரத்தன்மையில் ஆண்சிங்கத்தை யொத்தவர்களாகிய
பாண்டவரைவரும், அமர்ந்தனர் - (அங்குத்) தங்கியிருந்தார்கள்;

     வீமன் கதாயுதத்திலும், அருச்சுனன் விற்போரிலும், நகுலன் குதிரைத்
தொழிலிலும், சகதேவன் தேற்போரிலும் வல்லவராதலால், அவ்வவர்கட்கு
ஏற்குமாறு அடைமொழி கொடுத்துக்கூறினார்.  வீமசேனனது கதாயுதம்
சத்துருகாதினி யென்றும், அருச்சுனனது வில் காண்டீவமென்றும் பெயர்
பெறும்.  கைவரு - மிகப் பழகிய எனினுமாம்.  தண்டு - தண்டம் என்பதன்
விகாரம்.  தைவருதல் - தடவுதல்; தைவா - பகுதி.  குமரன் -
குமாரனென்றதன் குறுக்கல்: மன்மதனையும் குற்சித ரூபமுடையவனென்னும்படி
மிக்க கட்டழகுள்ளவனென்று பொருள்படும்; முருகக்கடவுளைக் குறிக்கும்
இப்பெயர், அவனைப்போன்ற வீரனுக்கு உவமையாகுபெயர்.  விடலை -
ஆண்பாற் சிறப்புப்பெயர்.                                   (263)

111.- பாசறை வருணனை. 

மறத்திருந் தானையான் வஞ்சமெண்ணினான்
அறத்திருந் திலனெனாவஞ்சி யந்தவூர்
புறத்திருந் ததுவெனப்புனிதன் பாசறை
நிறத்திருந் ததுபிறநிகர்ப்ப வில்லையே.

     (இ -ள்.) 'மறத்து இருந் தானையான் - (தன்னிடத்து மிகுதியாக)
அதருமத்தைக்கொண்ட பெரியசேனையை யுடையவனாகிய துரியோதனன்,
வஞ்சம் எண்ணினான் - (நியாயவழியிற்செல்லும் பாண்டவர்களை) மோசஞ்
செய்ய எண்ணினவனாகி, அறத்து இருந்திலன் - தருமவழியில்
(மனம்பொருந்தி) நடக்கவில்லை', எனா - என்று, அஞ்சி - (அவனது அருகிற்
செல்வதற்குப்) பயந்து, அந்த ஊர் - (புறப்பட்டு) அங்குவந்த இந்திரப்பிரத்த
நகரமானது, புறத்து இருந்தது - (அத்துரியோதனனது நகரத்திற்கு)
வெளியிடத்தில் தங்கிவிட்டது, என - என்று சொல்லும்படி, புனிதன் பாசறை -