பக்கம் எண் :

சூதுபோர்ச் சருக்கம் 270

பரிசுத்தனாகிய தருமபுத்திரனது படைவீடு, நிறத்து இருந்தது - மேன்மையுடன்
விளங்கியிருந்தது; (இவ்வாறு வருணித்துச் சொல்வதன்றி), பிற நிகர்ப்ப இல்லை
- வேறே ஈடாகச்சொல்லும்படி ஒப்பானபொருள் எவையுமில்லை; (எ - று.)

    இந்திரப்பிரத்தநகரத்தை ஆண்டுகொண்டிருந்த யுதிஷ்டிர ராஜன்
தன்சேனையோடும் புறப்பட்டுவந்து அத்திநாபுரத்திற்கு வெளியிலுள்ள
சோலையிற் பாசறையமைத்துத் தங்கியிருந்த தோற்றத்தை, புறப்பட்டுவந்த
இந்திரப்பிரத்தநகரம் வஞ்சனைக் கருத்தும் அக்கிரமச்செய்கையுமுடையவனான
துரியோதனனது நகரத்தினுட் செல்ல விருப்பங்கொள்ளாமல் வெளியிலேயே
தங்கியதுபோலுமென வருணித்தார்: தன்மைத்தற்குறிப்பேற்றவணி.
அப்பாசறையிலிருந்தவர்கள் யாவரும் இந்திரப்பிரத்தநகரத்தவர்களாதலினால்,
அப்பாசறை, இந்திரப்பிரத்தநகரமாகவே கொள்ளப் பட்டதென்க.  இனி,
துரியோதனனது அக்கிரமச் செய்கைக்கு அஞ்சி, அவனது ஆளுகைக்கு
உள்நில்லாது அத்திநபுரமே வெளியில் வந்திட்டதென வருணித்தவாறுமாம்.
'அந்தவூர்ப்புறத்திருந்தது' என்ற பாடத்திற்கு, வஞ்சி யென்று பிரித்து, அதற்குத்
தருமதேவதையெனப் பொருள் கொண்டு, அறநெறியினின்று வழுவாத
தருமபுத்திரன் பாசறையில் தங்கியிருந்ததை, துரியோதனனைக்
கொடுங்கோலுடைய னெனக்கொண்டு அவனது நகரத்திற்கு வெளியிலேயே
தருமதேவதை தங்கிவிட்டதுபோலு மென வருணித்ததாகக் கொள்ளலுமாம்.
மறம் - அறமென்பதன் எதிர் மொழி: (செய்யத்தகாதது இதுவென
நூல்களினால்) மறுக்கப்பட்டதெனப் பொருள்படும்.  அறம் -
(செய்யவேண்டியது இதுவென நூல்களினால்) வரையறுக்கப்பட்டதெனப்
பொருள்படும்.  பாசறை - சேனையுடன் சென்றோர் உறையுமிடம்.  நிகர்ப்ப -
பலவின்பாற்பெயர்.                                         (264)

112.- பாண்டவர்வரவுகேட்டுத்துரியோதனாதியர் மகிழ்தல்.

மீ்ண்டவர் வரிசிலைவிதுர னேவலாற்
பாண்டவர் வரவுமுன்பணிந்து கூறவே
மாண்டவர் குறிப்புறா மாயவஞ்சகம்
பூண்டவர் களித்துமெய்ப்புளக மேறினார்.

     (இ -ள்.) மீண்டவர்-திரும்பிவந்ததூதர்கள்,- வரிசிலை வி துரன்
ஏவலால்-கட்டமைந்த வில்லையுடைய விதுரனது கட்டளையினால், பாண்டவர்
வரவு - பாண்டவர்கள் (புறநகர்ச்சோலையில்) வந்துள்ளதை, முன் பணிந்து
கூற- (திருதராஷ்டிரனுக்கு) எதிரில் (வந்து) வணங்கிச்சொல்ல,- (அதுகேட்டு),
மாண்டவர் குறிப்புறா மாயம் வஞ்சகம் பூண்டவர் - மாட்சிமைப் பட்ட
பெரியோர்கள் (தமது மனத்தினால்) நினைக்கவும் மாட்டாத மாயமான வஞ்சகச்
செயலை மேற்கொண்டவர்களாகிய துரியோதனாதியர், களித்து - மகிழ்ச்சி
கொண்டு, மெய் புளகம் ஏறினார் - உடம்பில் மயிர்ச்சிலிர்ப்பு மிகப்
பெற்றார்கள்; (எ - று.)