இத்தூதர்கள், பாண்டவர் செய்தியை யுணர்ந்துவருமாறு துரியோதனாதியரால் அனுப்பப்பட்டுச் சென்றவ ராதலால், இங்கு 'மீண்டவர்' எனப்பட்டனர். தருமபுத்திரன் முதலியோர் வந்த செய்தியைக் கேள்வியுற்ற துரியோதனாதியர் 'இனிச் சூதாடி அவரை எளிதில் வென்றுவிடலாம்' என்ற கருத்தினால் மிக்க மகிழ்ச்சிகொண்டு மயிர்சிலிர்க்கப்பெற்றன ரென்க. மாண்டவர் - மாட்சிமைப்பட்டவர்; மாண் - பகுதி. (இச்சொல் இறந்தவரென்று பொருள்படும்போது, மாள் - பகுதியாம்.) புளகம் - மயிர்ச்சிலிர்ப்பு; வடசொல். (265) 113.- பாசறையின் சிறப்பு. தேசறை யிடங்களுந்தேங்கொள் கானமும் மூசறை மதுகர மொய்த்தசோலையும் வீசறல் வனநதி விதமுமேல்கொளப் பாசறை யிருந்தவா பகரலாகுமோ. |
(இ -ள்.) தேசு அறை இடங்களும்-ஒளிவீசுகின்ற பளிக்கறையினிடங்களும், தேன் கொள் கானமும் - தேனை மிகுதியாகக்கொண்ட காட்டினிடங்களும், மூசு அறை மதுகரம் மொய்த்த சோலையும் -நெருங்கிய ஆரவாரிக்கிற வண்டுகள் மொய்க்கப் பெற்ற பூஞ்சோலைகளும்,வீசு அறல்வனம் நதிவிதமும் - அலை வீசுகின்ற நீரையுடைய காட்டாறுகளின்வகைகளும், மேல் கொள - தன்னிடத்துப் பொருந்தும்படி, பாசறை இருந்தஆ(று) - (தருமபுத்திரனது) அந்தப்படைவீடு இருந்த தன்மை, பகரல் ஆகுமோ- (என்னால் வருணித்துச்) சொல்லுந் தன்மையுடையதோ? (எ - று.) இது, கவிக்கூற்று. அழகியகாடும் பூஞ்சோலையும் காட்டாறும் பொருந்தியுள்ள இடத்திலே பளிக்கறைகளையுடைய பாடிவீடுகளை யமைத்துக்கொண்டு பாண்டவர்கள் உல்லாசமாகத் தங்கியிருந்தன ரென்க. 'தேசு அறை' என்றமையால், 'பளிக்கறை' யென்று கொள்ளப்பட்டது; அன்றி, மணி பொன் முதலியன நிறைந்திருந்தமைபற்றி, 'தேசறை' என்றாருமாம். தேசு - தேஜஸ் என்ற வடசொல்லின் சிதைவு. தேன்+கொள்; தேங்கொள்: தேன்மொழி வலிவர ஈறுபோய் இனமெலிமிக்கது. அறல் - நீர்: நறுமண லுமாம். ஆ - விகாரம். ஓகாரம் - எதிர்மறை. (266) 114.- சூரியாஸ்தமனம். விருந்துறு சேனைவெவ் வீரரின்னமுது அருந்தினர் மெய்குளிர்ந்தசைவு தீர்தலும் வருந்தின ரிவர்துயில்வதிய வேண்டுமென்று இருந்தப னனுமிவர்க் கிரவுநல்கினான். |
(இ -ள்.) விருந்து உறு சேனை வெம் வீரர் - புதிதாக அங்கு வந்து தங்கிய கொடிய சேனைவீரர்கள், இன் அமுது அருந்தினர் - |