பக்கம் எண் :

சூதுபோர்ச் சருக்கம் 273

    ஸோமன், இந்து என்ற வடமொழிகளும், மதி என்ற தென்மொழியும்
சந்திரனுக்கேயன்றிக் குபேரனுக்கும் பரியாயநாமமாக வழங்குதல்பற்றி,
சந்திரனை 'குபேரன்' என்றார்.  சந்திரனை 'குபேரன்' என்ற சொல்லாற்
குறித்தது, லக்ஷிதலக்ஷணை யென்க.  (குபேரன் - ஸோமன், இந்து, மதி.
ஸோமன், இந்து, மதி=சந்திரன்).  கீழ்க் காண்டவதகனச்சருக்கத்தில்
"மதியுமம்மதி முடித்தவனும்" என்றவிடத்தும், மேல் நிரைமீட்சிச்சருக்கத்தில்,
"குடதிசை மகவான் வாளி குணதிசைவருணன்வாளி, வடதிசை மறலிவாளி
தென்திசைமதியின்வாளி, அடலுறவிமைப்பினேவி" என்றவிடத்தும் 'மதி'
என்பது குபேரனுக்கு வழங்கப்பட்டுள்ளது.  இவ்வகை வழக்குப்பற்றி,
பிற்காலத்து நிகண்டில் 'கலையினனுடுவின் வேந்தன் கலாநிதியொடு குபேரன்"
எனச்சந்திரன்பெயர்களிற் குபேரனென்பதைச் சேர்த்தும், "புருடவாகனனே
சோமன் புட்பக விமான முள்ளோன்" எனக் குபேரன் பெயர்களில்
ஸோமனென்பதைச் சேர்த்தும் கூறினர்.  'குபேரன்' - குற்சிதமான
உடம்பையுடையவன்.  அப்பெயர் க்ஷயரோகத்தால் உடல்குன்று பவனான
சந்திரனுக்கும் காரணவகையால் ஏற்குமென்பதையுமுணர்க.  சந்திரன் குலத்
தோரை "குபேரன் குலத்தோர்" என்றார், கீழ் இராயசூயச் சருக்கத்தும். (268) 

116.-இதுமுதல் மூன்றுகவிகள் -நிலாத்தோற்றத்தின்
வருணனை.

மருண்மிகு சுரும்பின மணந்தசோலையின்
இருள்களி னிடையிடை யெறித்தவெண்ணிலா
அருளுடை மைந்தர்தோ ளணைந்தமங்கையர்
புரிகுழ னெகிழ்ந்தவெண் போதுபோலுமே.

     (இ -ள்.) மருள் மிகு சுரும்பு இனம் மணந்த சோலையின் - (மது
உண்டதனால்) மயக்கம்மிகுந்த வண்டுகளின் கூட்டம் மொய்க்கப்பெற்ற அந்தச்
சோலையிலே, இருள்களின் இடை இடை-(மரங்களினது) நிழல்களினிடை
யிடையே, எறித்த - துண்டு துண்டாகக் காணப்படுகின்ற, வெள் நிலா -
வெண்மையாகிய நிலாவொளியானது,-அருள் உடை மைந்தர் தோள்
அணைந்த-(தம்மிடத்துக்) காதலையுடைய ஆடவர்களது தோள்களைத் தழுவிய,
மங்கையர்-இளமகளிரது, புரி குழல்-சுருண்ட கூந்தலினின்று, நெகிழ்ந்த-சரிந்த,
வெள் போது-வெண்மையான மலர்களை, போலும்-ஒத்திருக்கும்; (எ - று.)

    சோலையிலுள்ள மரங்களின்கீழ்க் கருநிறமாகக் காணப்படும்
நிழல்களினிடையிடையே தோன்றுகின்ற நிலா, கணவரோடு புணர்ந்த மகளிரது
அவிழ்ந்தகூந்தலி னிடையிடையே நெகிழ்ந்து தோன்றுகின்ற மல்லிகை முதலிய
வெண்மலர்களை யொக்குமென வருணித்தார்; தற்குறிப்பேற்றவுவமையணி.
மரங்களின் இருண்ட நிழற்கு மகளிர்கருங்கூந்தலும், வெண்ணிலாவுக்கு
வெண்மலர்களும் ஒப்பு.  இரண்டாமடியில், இருள் நிலா என மாறுபட்ட
சொற்கள்வந்தது, முரண்தொடை.                                (269)