பக்கம் எண் :

சூதுபோர்ச் சருக்கம் 274

117.கானிடை சிலசில கடிகொடேனுமிழ்
தூநிற முல்லைகண் மலர்ந்துதோன்றுமால்
வானிடை முறைமுறை வளருமாமதி
மேனியி னமிழ்துமிழ்விந்து வென்னவே.

     (இ -ள்.) கானிடை-அச்சோலையினிடத்திலே,-கடி கொள்தேன் உமிழ் தூ
நிறம் சிலசில முல்லைகள்-வாசனையைக்கொண்ட தேனைக் கக்குகின்ற
வெண்ணிறமான சிற்சில முல்லைமலர்கள்,-வானிடை முறை முறை வளரும் மா
மதி மேனியின் உமிழ் அமிழ்து விந்து என்ன-ஆகாயத்திலே (சுக்கிலபட்சத்தில்
நாடோறும்) ஒவ்வொருகலையாக வளருந்தன்மையுள்ள சிறந்த சந்திரனது
உடம்பிலிருந்து சொரிந்த அமிருதத்தின் துளிகள்போல, மலர்ந்துதோன்றும்-
மலர்ந்து காணப்படும்; (எ - று.)-ஆல்-ஈற்றசை.

    சோலையிலுள்ள முல்லைக்கொடிகளில் நிலவெறித்தபோது அலர்ந்து
காணப்படும் வெண்மலர்களை, அமுதகிரணனான சந்திரனிடத்தினின்று சிந்திக்
காணப்படுகின்ற அமுதத்துளிகளாகக் குறித்தார்; தன்மைத் தற்குறிப்பேற்றவணி.
அமுதுவெண்ணிறமுடையதாதலை, "அமுதினின் விளர்த்து" என்பதனாலும்
அறிக.  கடி-உரிச்சொல்:  இங்கு, வாசனையென்னும் பொருளில் வந்தது.
'தூநிறம்' என்றது, வெண்ணிறத்தை.  சுக்கிலபட்சமாகிய வளர்பிறையிற் சந்திரன்
நாடோறும் ஒவ்வொருகலையாக வளர்தலால், 'முறைமுறை வளருமாமதி'
என்றார்.  அமிழ்து, விந்து-அம்ருதம், பிந்து என்ற வடசொற்களின் விகாரம்;
ஈற்றடியில், மேனியின் - உடம்பிலுள்ள, அமிழ்து-அமிருதத்திலிருந்து, உமிழ்-
பெருகுகிற, விந்து என்ன - துளிபோல எனப் பதவுரை கூறுதலுமாம்.     (270)

118.பொருவில்வெண் டுகில்கொடுபொதிந்த தென்னவே
பரிநெடுந் தேர்மிசைப் பானிலாவெழக்
கிரணவெண் படைக்கெதிர்கெடாம னின்றபேர்
இருளென விளங்கின யானைவெள்ளமே.

     (இ -ள்.) பரி நெடுந் தேர் - (பாண்டவர் சேனையிலுள்ள) குதிரைகள்
பூட்டிய பெரிய தேர்கள், மிசை பால் நிலா எழ - தம் மீது வெண்ணிறமான
நிலாப் படிந்து தோன்றுவதனால், பொருவு இல் வெள் துகில் கொடு
பொதிந்ததுஎன்ன - ஒப்பில்லாதவெண்ணிறமாகிய வஸ்திரங்களினால்
மூடப்பட்டனபோலவும், - யானைவெள்ளம் - (அந்நிலவிலும்
கருநிறமாகவேதோன்றும்)யானைகளின் கூட்டம், கிரணம் வெள் படைக்கு
எதிர் - (சந்திரனது)கிரணங்களாகிய வெண்ணிறமுள்ள ஆயுதங்கட்கு எதிரில்,
கெடாமல் நின்ற -அழியாது நிலைநின்ற, பேர் இருள் என - பெரிய இருள்
போலவும்,விளங்கின-; (எ - று.)

    தேர்களின்மீது முழுவதும் வெண்ணிலாப் படிந்து தோன்றுவதை
அத்தேர்கள் வெண்ணிறத்துகிலுறையினால் மூடப்பட்டனவாகவும், நிலாவிலும்
கருநிறமாகத்தோன்றும் யானைகளைச் சந்திர