கிரணங்கட்கு எதிரிலே சிதையாது நின்ற இருட்கூட்டமாகவும் குறித்தார்: இவையும் தன்மைத்தற்குறிப்பேற்றவணிகளே. பகையொழிக்கும் படைபோலச் சந்திரகிரணங்கள் இருளை யொழித்தற்குக் கருவியாயிருத்தலால், அக்கிரணங்களைப் படையெனக் கொண்டார்; ஆயினும், இங்கு, இருளையொழித்தல் தொழில் நிகழ்வதற்குப் படைகள் உபகாரப்படாம லிருத்தலால், 'கிரணவெண்படை' என்றது - திரிபணியாம்: (உருவகவணியன்று; உருவகவணியில் உபமேயம் உபமானமாந்தன்மையை யடைந்து பின்வருந்தொழிற்கு உபகாரப்பட்டுநிற்கும்: "வீமனாகிய மந்தரம் சேனைக்கடலைக் கலக்கியது" என்றவிடத்து வீமனென்ற உபமேயம் மந்தரமென்ற உபமானத்தன்மையைப் பெற்றுக் கடலைக் கலக்குதலாகிய பின்வருந் தொழிற்கு உபகாரப்பட்டு நிற்றல் காண்க.) (பின்னிரண்டடிகளை) இல்பொருளுவமையணியெனினும் இழுக்காது. படை - சேனையுமாம். 'தேர்' என்பது சாதியொருமையாதலால், 'பொதிந்தது' என்னும் ஒருமைமுடிபைக் கொண்டது. என்ன, என - தற்குறிப்பேற்றவுருபுகள். (271) 119.-மதயானைகளின் செயல். பரியன கந்துகம் பரிந்து மாமதக் கரிசில பாகையுங் கைக டந்தன அரிவையர் பலர்துயி லனந்தலோடுதஞ் சுரிகுழன் மேகலை சோரவோடினார். |
(இ -ள்.) மா மதம் கரி சில-(அச்சேனையிலுள்ள) மிக்கமதத்தையுடைய சிலயானைகள், பரியன கந்துகம் பரிந்து - பெரியவையாகிய கட்டுத்தறிகளை முறித்துக்கொண்டு, பாகையுங் கை கடந்தன - பாகர்களுக்கும் அடங்காது மீறியோடின; (அதனால்), அரிவையர் பலர் - (உடன்சென்று அங்குத்தங்கியிருந்த) பலமகளிர், துயில் அனந்தலோடு - உறக்கமயக்கத்துடனே, தம் சுரி குழல் மேகலை சோர - தமது சுருண்ட கூந்தலும் மேகலையென்ற ஆபரணமும் சரிந்துவிழும்படி, ஓடினார் - (அச்சங்கொண்டு) ஓடலானார்கள்; (எ - று.) கட்டுத்தறியை முறித்தலும், பாகர்கட்கு அடங்காது மீறி நடத்தலும் மதயானைகளின் இயற்கை; "தூணும் விலங்குமுறிப்பது பாகுபரிக்கோல் யாவுந் தூரத்தே, காணினு நின்றுகொதிப்பது" என்பர் மேற் பதினாறாம் போர்ச்சருக்கத்தும். பரியன - பலவின்பாற் குறிப்புவினையாலணையும் பெயர். கந்துகம் - ஸ்கந்தம் என்ற வடசொல்லின் விகாரமென்க. பாகு - உயர்திணைப்பொருள் தரும் அஃறிணைச்சொல்; உம் - உயர்வுசிறப்பு. அரிவையர் என்ற சிறப்புப்பெயர் - இங்கு, மகளிரென்ற மாத்திரமாய் நின்றது: அப்பருவத்துக்கு வயதெல்லை-இருபதுமுதல் இருபத்தைந்தளவும். அனந்தல் - குறைத்தூக்கம். சுரி குழல் - நுனிசுருண்ட கூந்தல். மேகலை - மாதரிடையில் அணிந்துகொள்ளும் எழுகோவையணி; (இங்ஙனமாதலை, "எண்கோவை காஞ்சி யெழுகோவை மேகலை, |