பண்கொள்கலயம் பதினாறு - கண்கொள், பருமம் பதினெட்டு முப்பத்திரண்டு, விரிசிகை யென்றுணரற் பாற்று" என்பதனாலுணர்க;) எண்கோவை யென்றலுமுண்டு. (272) 120.-இதுவும் அது. நீடுறு தருக்களி னிரைத்த மாவதன் கோடிற வெறிந்துகைக் கொள்ளுமோதையான் மாடுறு பொங்கர்வாய் வதிந்தபுன்வெரீஇப் பேடொடு சேவன்மெய் பிரிந்துநேடுமால். |
(இ -ள்.) நீடுறு தருக்களில் நிரைத்த மா - பெரிய மரங்களில் வரிசையாகக்கட்டப்பட்ட யானைகள்,- அதன் கோடு இற எறிந்து - (தம்மைக்கட்டப்பெற்ற) அந்தந்த மரத்தின் கிளைகளை ஒடியும்படி முறித்து, கைகொள்ளும் - துதிக்கையிற்கொள்ளுதலாலுண்டாகிற, ஓதையால் - ஓசையினால்,- மாடு உறு பொங்கர்வாய் வதிந்தபுள்-அருகிற் பொருந்திய சோலைகளில் தங்கியுள்ள பறவைகள்,-வெரீஇ - அஞ்சி, பேடொடு சேவல் மெய் பிரிந்து - (ஒன்றாய்க்கூடியிருந்த) பெண்பறவைகளோடு ஆண்பறவைகளும் (தம்மிற்) பிரிந்துபோய், நேடும் - (பிறகு ஒன்றை யொன்று) தேடும்; (எ - று.)-ஆல் - ஈற்றசை. ஆணும்பெண்ணுமாய்க் கூடியிருந்த பறவைகள், அச்சேனையின் யானைகள் மரங்களை முறித்த ஓசையைக் கேட்டு அஞ்சிப்பிரிந்துத் தனித்தனி பறந்து பிரிந்து பிறகு ஒன்றையொன்று தேடுவனவாயின வென்க. ஒலியைக்கேட்டு அஞ்சிப்பறத்தல், பறவைகளின் இயல்பு: வெரீஇ=வெருவி: சொல் விகாரப்பட்டு அளபெடுத்ததனால். சொல்லிசையளபெடை. பேடு, சேவல் என்பன - முறையே, பறவைகளின் பெண்மை ஆண்மைப் பெயர்களாம். (273) 121.-குதிரைகளின் செயல். ஊதையின் மரனசை யுறப்பொ றாவடம் மோதுறு முளையுடன் முடுகுவேட்டமாய்த் தீதறு பரிசில செல்வன் பாசறை மாதிர முறப்பல வாளிபோதுமால். |
(இ -ள்.) தீது அறு சில பரி - (அச்சேனையிலுள்ள) குற்றமற்ற சில குதிரைகள்,-ஊதையின் மரன் அசையுற-பெருங்காற்றினால் மரங்கள் அசைய, பொறா - (அந்த விசையைப்) பொறாமல், - வடம் மோதுறு முளையுடன் - கயிறுகொண்டு கட்டப்பட்ட முளைத்தறிகளுடனே, முடுகு வேட்டம் ஆய் - விரைவான ஓட்டங்கொண்டு, செல்வன் பாசறை மாதிரம் உற - செல்வச்சிறப்புடையவனாகிய தருமபுத்திரனது படைவீட்டின் பக்கங்களிற் பொருந்தும்படி, பல வாளி போதும் - பலதரம் வட்டமாகச் சுழன்று செல்லலாயின; (எ - று.)-ஆல் - அசை. |