பக்கம் எண் :

சூதுபோர்ச் சருக்கம் 277

    பெருங்காற்றினால் மரங்கள் அசைய வெருண்டு குதிரைகள் முளையோடு
பிடுங்கிக்கொண்டு ஓடலாயின வென்க.  மரன்-மரம்-மகரனரம்
மாறிவருஞ்சொல்.  பொறா - ஈறுகெட்ட எதிர்மறை வினையெச்சம்;
பொறாதனவாய் என்று பொருள் கொண்டால், எதிர்மறைப்பலவின்பால்
முற்றெச்சமாம்.  வாளி - குதிரைகள் வட்டமாயோடும் ஓட்டம்: மண்டலகதி
யெனப்படும்.  வேட்டம் - வேட்டை:  இங்கு, ஓட்டத்திற்கு இலக்கணை. (274)

122.-வீரர்களின் செயல்.

ஆடுவர் சிலர்சில ரைவர் வான்புகழ்
பாடுவர் சிலர்சிலர் பாயலின்புறக்
கூடுவர் சிலர்சிலர்கோதை மாதரோடு
ஊடுவர் சிலர்சில ரோகைவீரரே.

     (இ -ள்.) ஓகை வீரர் -(அப்பாசறையில் தங்கியுள்ள) மகிழ்ச்சியை
யுடையவர்களாகிய வீரர்களில்,-சிலர் சிலர் - சிற்சிலபேர், ஆடுவர் -
(மகிழ்ச்சியினாற்) கூத்தாடுவார்கள்: சிலர் சிலர் - மற்றுஞ்சிலர், ஐவர் வான்
புகழ்பாடுவர் - பஞ்சபாண்டவரது சிறந்த கீர்த்திப்பாக்களை
யெடுத்துப்பாடுவார்கள்; சிலர் சிலர்-வேறுசிலர், பாயல் இன்புஉற கூடுவர் -
படுக்கையிலே இன்பமுண்டாகும்படி (தமக்குஉரிய மகளிரோடு) கூடுவார்கள்;
சிலர்சிலர்-பின்னுஞ்சிலர், கோதை மாதரோடு ஊடுவர் - மாலை யணிந்த
மனைவியரோடு பிணங்குவார்கள்; (எ - று.)

     புகழ் - அதனையுணர்த்தும் பாடலுக்கு ஆகுபெயர்.  சிலர் சிலர் -
அடுக்கு, அசைநிலை.  "மாதர் காதல்" என்ற தொல்காப்பியவுரியியல்
சூத்திரத்தின்படி விருப்பத்தையுணர்த்தும் 'மாதர்' என்னும் உரிச்சொல்.
அதற்கு இடமாகிய மகளிரை யுணர்த்திற்று.  ஓகை - உவகை யென்பதன்
மரூஉ. 'கோதை மாதரோடு' என்றது - மத்திமதீபமாய்,
முந்தினவாக்கியத்தோடும் இயையும்.                          (275)

123.-சூரியோதயம்.

பஞ்சவர் வாழ்வுறு பதம்பொறாமையின்
வஞ்சக மியற்றுவான்மனங்கொ லென்னவே
மிஞ்சிய குளிர்மதிமேற்பொ றாதிகற்
செஞ்சுட ரவன்குணதிசையிற் றோன்றினான்.

     (இ -ள்.) பஞ்சவர் வாழ்வுறு பதம் பொறாமையின் - பாண்டவரெவரும்
வாழ்கிற நிலைமைக்கு மனம்பொறாததனால், வஞ்சகம் இயற்றுவான் -
(அப்பாண்டவர்கட்குத்) தீமையையியற்றத் துணிந்தவனாகிய துரியோதனனது,
மனம் என்ன-மனம்போல்,-மிஞ்சிய குளிர் மதிமேல் பொறாது - மிகக்
குளிர்ச்சியையுடைய சந்திரன்மீது பொறாமைகொண்டு, இகல் -(அவனிடத்து)
மாறுபாடு