பக்கம் எண் :

சூதுபோர்ச் சருக்கம் 280

தெரிவிக்க, பாண்டவர் உள்ளேசென்று அப்பெரிய தந்தையை வணங்கினார்கள்.
மீளி - ஆண்பாற் சிறப்புப்பெயர்:  இச்சொல்லுக்கு - திண்ணியனென்ற
பொருளும் உண்டு; "கராசலம் பதினாயிரம் பெறுவலிக் காயமொன்றினிற்
பொற்றோ, ளிராசகுஞ்சரம் பிறந்திடும் விழிப்புலனில்லைமற்றதற் கென்றான்"
என்றும், "வலியுடை விழியின்மைந்தன்" என்றும் கீழ்ச் சம்பவச்சருக்கத்திற்
கூறியபடி திருதராஷ்டிரன் பதினாயிரம் யானை பலங்கொண்டவனாதலால்,
மீளியெனத் தகுவன்.  'முந்தை ஏவலால் மொழிய' - பெரியதந்தை
கட்டளையிட எனினுமாம்.                                    (279)

127.- திருதராட்டிரன்அன்புதோன்றச் சில கூறுதல். 

தம்பி மைந்தரைத் தழுவிநும்மையின்று
எம்பி காணநல் வினையியன்றிலான்
உம்பி மாரொடு மொத்துவாழ்கநீர்

நம்பி யென்றுதன் னயம்விளம்பினான்.

    (இ - ள்.) (திருதராட்டிரன்),- தம்பி மைந்தரை தழுவி- (தனது)
தம்பியாகிய  பாண்டுவின் மக்களை (பாண்டவர்களை)க் கட்டியணைத்து,
'இன்று-(நீவிர் பராக்கிரமத்தோடு சிறப்பாக விளங்கும்) இக்காலத்தில், எம்பி -
எனது தம்பியாகிய பாண்டு, நும்மை-(மக்களாகிய) உங்களை, காண -
கண்டுமகிழ்தற்கு, நல்வினை இயன்றிலான் - புண்ணியம்
அமையாதவனாயினான்; (அது நிற்க:)- நீர் - நீங்களைவரும், நம்பி -
விசுவாசம் வைத்து, உம்பிமாரொடும் - உங்கள் தம்பிமார்களாகிய
துரியோதனாதியருடனே, ஒத்து வாழ்க - மனமொன் றுபட்டு வாழ்வீர்களாக'
என்று-, தன் நயம்-தனக்கு நன்மைதருவனவான  தந்திரமொழிகளை,
விளம்பினான் - சொன்னான்; (எ - று.)

    இராசசூயயாகஞ்செய்து பலவகைச் சிறப்புக்களையும் பெற்றிருக்கும்
இந்நிலையிலே புத்திரரான பாண்டவர்களைக் கண்டு களிக்குமாறு
பாக்கியஞ்செய்யாமல் தன் தம்பியாகிய பாண்டு இளமையிலேயே
இறந்துபோனதைக் குறித்து இரங்கிக்கூறுவான், 'நும்மை இன்று எம்பி காண
நல்வினையியன்றிலான்' என்றான்.  வீமன் முதலிய நால்வரும்
துரியோதனனுக்கு இளையராயிருக்கவும், இங்கே துரியோதனாதியரைத்
திருதராட்டிரன் 'உம்பிமார்' என்றது, யாவரினும் பெரியவனான
தருமபுத்திரனையே பிரதானமாக்கிக்கூறுவதனா லென்க.  பாண்டவர்களும்
துரியோதனாதியரும் ஒத்துவாழ்வது, தனது மக்களாகிய நூற்றுவர்
க்ஷேமமாயிருப்பதற்குக் காரணமாய்த் தனக்கு நன்மை யாகுதல்பற்றி,
அவ்வார்த்தை, 'தன் நயம்' எனப்பட்டது.  துரியோதனாதியர் தீங்குசெய்யினும்
அதனை நீங்கள் பாராட்டி வேறுபடாது அவர்களிடத்தில்
மனவொற்றுமையுடனே யிருக்கவேண்டுமென்ற தனது உட்கோளைத்
திருதராட்டிரன் பின்னிரண்டடிகளினால் வெளியிட்டான்.  நல்வினை -     
ஸு க்ருதம்.                                          (280)