128.- திரௌபதியைத்திருதராட்டிரன் வாழ்த்திக் காந்தாரியிடம் அனுப்புதல். பாவை தன்செழும்பணிவு கூறலும் மேவி வாழ்கெனாமெய்க ளிக்கவே தேவி தன்னுழைச்செல்க வென்றுகொண்டு ஏவி மைந்தரோடிவைவி ளம்பினான். |
(இ -ள்.) பாவை-சித்திரப்பிரதிமைபோன்ற அழகிய திரௌபதியானவள், தன் செழும் பணிவு - தனது மிக்க வணக்கத்தை, கூறலும் - (திருதராட்டிரனுக்குச்) சொன்னவளவில்,- (அவன் அத்திரௌபதியைக் குறித்து), மெய் களிக்க மேவி வாழ்க எனா - 'சரீரத்தில் ஆரோக்கியமுண்டாக (வெகுகாலம்) பொருந்திவாழ்வாயாக' என்று வாழ்த்தி, (பின்பு), தேவி தன்னுழை செல்க என்று கொண்டு ஏவி-'பட்டமகிஷியாகிய காந்தாரியினிடத்திற் போயிருப்பாயாக' என்று கட்டளையிட்டு, (திரௌபதியை அனுப்பிவிட்டு),- மைந்தரோடு இவை விளம்பினான்-(பாண்டவரிடம்) இவ்வார்த்தைகளைக் கூறுபவனானான்; (எ - று.)- அவற்றை, அடுத்த ஐந்து கவிகளிற் காண்க. திருதராட்டிரன் பிறவிக்குருட னாதலால், திரௌபதி தான் வணங்குவதைக் கூறவேண்டுவதாயிற்றென்க. இனி, பாவை தன் - திரௌபதியினது, செழும்பணிவு - மிக்கவணக்கத்தை, கூறலும் - (அங்குள்ளோர் திருதராட்டிரனுக்கு) எடுத்துக்கூறலும் எனப் பதவுரை கூறினும் பொருந்தும். பாவை - உவமையாகுபெயர். வாழ்கெனா - வியங்கோளின் அகரவீறு தொகுத்தல். என்று கொண்டு, கொண்டு-அசை. மெய்களிக்க விளம்பினான் எனஇயைக்கவுமாம். (281) 129.-இதுமுதல் ஐந்து கவிகள் -திருதராட்டிரன் கூறிய முகமன். கரும நீதிசேர் கல்விமந்திரம் பெருமை யாண்மைதாள் பீடுநீடுபேர் தருமம் யாவுநின் றன்மையாதலால் அருமை யின்றியே யரசுசெல்லுமே. |
இதுமுதல் ஆறுகவிகள் - ஒருதொடர் (இ -ள்.) கருமம் - செய்தொழில்திறமும், நீதி - நியாயமும், சேர் கல்வி - மிக்க கல்வியறிவும், மந்திரம் - ஆலோசனைத்திறமும், பெருமை -பெருந் தன்மையும், ஆண்மை - பராக்கிரமும், தாள் - முயற்சியும், பீடு நீடு பேர் - கௌரவமிக்க புகழும், தருமம் - தருமமும், யாவும் . ஆகிய இவையெல்லாம், நின் தன்மை ஆதலால் - (உனது) இயற்கைக் குணங்களாதலினால்,- அரசு - (உனது) அரசாட்சி, அருமை இன்றியே-அருமைப்பாடு இல்லாமலே, செல்லும் - (குறைவின்றி இனிதாக) நடக்கும்; (எ - று.)- ஈற்று ஏகாரம் - தேற்றம். |