நீதி சேர் கல்வி என்று எடுத்து - அரசுநீதியைப் பற்றித்தெரிவிக்கின்ற கல்வி யென்று பொருள் கூறினுமாம். 'நீதிசீர்கல்வி' என்ற பாடம் - நீதியும் சிறந்த கல்வியும் என்று பொருள்படும். தருமம் - மறுமைக்குச் சாதகமாய் இப்பிறப்பிற்செய்யும் நற்றொழில். அரசு செல்லுமே - அரசு இனிதாகச் செல்லுகின்றதன்றோ? என வினாவாகப் பொருள் கூறினும் பொருந்தும். (282) | 130. | இகலெ றிந்துநீ யிராயசூயமா மகமு ழந்ததும் வண்மைசெய்ததும் திகைய டங்கலுந் திறைகொணர்ந்ததுந் தொகுதி கொண்டநின்றுணைவர் கூறினார். |
(இ - ள்.) நீ-, இகல் எறிந்து - (தம்பிமார்களைக்கொண்டு திக் விஜயம் செய்யத்தொடங்கிப்) பகைவர்களை அழித்துச்சயித்து, திகை அடங்கலும் திறை கொணர்ந்ததும் - எல்லாத்திக்குக்களிலுமிருந்து திறைப்பொருள் கவர்ந்து கொண்டுவந்ததையும், (பின்பு), இராயசூயம் மா மகம் உழந்ததும் - இராசசூயமென்கிற பெரியயாகத்தைச் சிரமப்பட்டுச் செய்ததையும், வண்மை செய்ததும் - (அந்த யாகத்தில்) தியாகஞ் செய்ததையும், (ஆகிய உனது சிறப்புக்களையெல்லாம்), தொகுதி கொண்ட நின் துணைவர்-மிக்ககூட்டமான உனது தம்பிமார்கள், கூறினார் - (எனக்குச்) சொல்லியுள்ளார்; (எ - று.) இகல் - பகைமை: அதனையுடைய பகைவர்க்குப் பண்பாகுபெயர். திகை - அதிலுள்ளார்க்கு, இடவாகுபெயர். 'பாடத்தின் முறைமையினும் பொருண்முறைமை சிறந்தது' என்னும் மீமாஞ்சகர் கொள்கைபற்றி, 'இகலெறிந்து திகையடங்கலுந் திறை கொணர்ந்ததும்' என்று கூட்டிப் பொருளுரைக்கப்பட்டது. துரியோதனாதியர் நூற்றுவராதலால், 'தொகுதிகொண்ட நின் துணைவர்'என்றான். (283) | 131. | எண்டி சாமுகத் தெல்லையெங்கணுங் கொண்ட தாகுமுன் குருகுலத்துளோர் துண்டி யாமனுந் துணைவர்தம்மொடும் பண்டு போலமண் பரவவைகுவீர். |
(இ - ள்.) எண் திசா முகத்து எல்லை எங்கணும் - எட்டுத் திக்குக்களையுடைய(நிலவுலகத்து) எல்லை முழுவதும், முன் குருகுலத்து உளோர் -பழமையாய்வருகின்ற குருகுலத்தைச் சேர்ந்த அரசர்கள், கொண்டது ஆகும் -கைப்பற்றி அரசாண்டதாகும்; (அதுபோலவே),- துண்டியாமல் - (அவ்விராச்சியத்தை உங்களது என்றும் துரியோதனாதியரது என்றும்) வேறுபாடு காட்டாமல், நும் துணைவர்தம்மொடும்-உமது உடன்பிறந்தோராகிய துரியோதனாதியரோடும், பண்டுபோல-முன்போலவே, மண் பரவ - இந்நிலவுலகத்திலுள்ளோர் புகழும்படி, வைகுவீர் - ஒற்றுமைப்பட்டு வாழ்வீர்களாக; (எ - று.) |