பக்கம் எண் :

சூதுபோர்ச் சருக்கம் 283

    பரம்பரையாகவருங் குருகுலத்தாரது ஏகசக்ராதிபத்தியத்தைக் கெடுத்து
விடாமல் ஒற்றுமைப்பட்டு  ஆளவேண்டுமெனத் திருதராஷ்டிரன்
கூறினனென்க.  இனி, இச்செய்யுட்கு - 'நீங்கள் துரியோதனாதியரோடு
மனவொற்றுமைகொண்டு பிரியாமல் வாழ்வீர்களாக; அவ்வாறு வாழ்ந்தால்,
இவ்வுலக முழுவதும் பழமையாகிய குருகுலத்து அரசர்களாகிய உங்களாற்
கைப்பற்றப்பட்டதாய்விடும்' என்னும் கருத்துப்படப் பொருள் கூறினும்
பொருந்தும்.  பண்டு  - பழமைகுறிக்கும் இடைச்சொல்.  மண் -
இடவாகுபெயர்.                                             (284)

132.சேணி ருந்துநுஞ் சீர்செவிப்படுத்
தியாண ரன்புகூ ரினிமையன்றியே
பூண லம்பெறும்பொற்பொ டுங்களைக்
காணு மாறுசெங் கண்படைத்திலேன்.

    (இ - ள்.) சேண் இருந்து - தூரத்தேயிருந்து, நும் சீர் செவிப்படுத்து-
உங்கள்சிறப்புக்களைக் கேள்வியுற்று, யாணர் அன்பு கூர் இனிமை அன்றி-
புதிய[அவ்வப்போது உண்டாகின்ற] அன்பின் மிகுதியினால் (தோன்றும்)
மகிழ்ச்சியை(க்கொள்வதே) யல்லாமல், - பூண் நலம் பெறும் பொற்பொடு-
ஆபரணங்களினால் இனிதாகப் பொருந்திய இயற்கையழகுடனே கூடிய,
உங்களை-,- காணும் ஆறு - நேரே கண்டு களிக்கும்படி, செம் கண்
படைத்திலேன் - நல்ல [பார்க்குந்  தன்மையுள்ள] கண்களைப்
பெற்றேனில்லை;

    உங்கள் சிறப்புக்களைப் பிறர்சொல்லச் செவியினாற்கேட்டறிந்து
மகிழ்கின்றேனேயல்லாமல் கண்ணினால் நேரிற்காணும் பாக்கியம்
பெற்றிலேனேயென்று அப்பாண்டவரைத் தன்வசப்படுத்தி வஞ்சித்தற்காக,
அன்புடையான்போலத் திருதராஷ்டிரன் பசப்புமொழி கூறினனென்க:
இத்தன்மை, அடுத்த செய்யுளினால் நன்கு விளங்கும்.
படுத்து+யாணர்=படுத்தியாணார்; குற்றியலிகரம்.  யாணர் - புதுமையுணர்த்தும்
உரிச்சொல்.  'பூணலம் பெறும்' என்று செயற்கையழகையும், 'பொற்பொடு'
என்று இயற்கையழகையுங் குறித்தபடி.  மூன்றாமடிக்கு, பூண் - மேற்கொண்ட,
நலம் - நற்குணத்தையும், பெறும் - (இயற்கையாகப்) பெற்றுள்ள, பொற்பொடு -
அழகையும் அடைந்துள்ள எனப்பதவுரை கூறினுமாம்.              (285)

133.

நேயமுண்டுபோ னெஞ்சொடின்னசொல்
தூய  மைந்தரைச் சொல்லிநீவிர்போ
யாயை யும்பணிந் தெந்தைதாண்மலர்ச்
சேய பங்கயஞ் சேர்மினென்னவே.

    (இ - ள்.) நேயம் உண்டுபோல்-(பாண்டவரிடத்துத் தனக்கு) அன்பு
உள்ளதுபோல், நெஞ்சொடு - வஞ்சனைக்கருத்துடனே, இன்னசொல் -
இவ்வார்த்தைகளை, தூய மைந்தரை சொல்லி - பரி