பக்கம் எண் :

சூதுபோர்ச் சருக்கம் 284

சுத்தர்களாகிய அப்பாண்டவர்களைக் குறித்துக்கூறி,- 'நீவிர் - நீங்கள், போய் -
(இங்கு நின்றுஞ்) சென்று, யாயையும் பணிந்து-(உங்கட்குத்) தாய்முறையாகிற
காந்தாரியையும் வணங்கி, எந்தை சேய பங்கயம் மலர் தாள் சேர்மின்-
எனக்குப் பெரியதந்தையாகிய வீடுமனது செந்தாமரைமலர்போன்ற பாதங்களைச்
சேர்ந்து வணங்குங்கள்,' என்ன - என்று (திருதராட்டிரன்) கட்டளையிட,- (எ -
று.)- 'சென்று . . . . . .பரிந்திறைஞ்சினார்' என்று அடுத்த கவியோடு
தொடர்ந்து முடியும்.

    பாண்டவரை நோக்கித் திருதராட்டிரன் காந்தாரியை வணங்கி விட்டு
வீடுமனைச் சென்று பணியுமாறு கூறினான்.  நெஞ்சொடு நேயம் உண்டுபோல்
என்று இயைத்து, மனத்தில் அன்பு இருப்பதுபோல (ப் பாவனைசெய்து)
என்றும் கூறலாம்: இப்பொருளில், நெஞ்சொடு - உருபுமயக்கம்.  சேய -
'செம்மை' என்னும் பண்புப்பெயரினடியாப் பிறந்த குறிப்புப்பெயரெச்சம்:
போய்+யாய் = போயாய்: தனிக்குறிலைச் சாராதயகரம் யகரம்வரக் கெட்டது
["யரழமுன்னர்" என்ற சூத்திரத்து 'மேல்' என்ற மிகையைக்காண்க.] யாயையும்,
உம்மை - இறந்தது தழுவியது.                                (286)

134.- பாண்டவர்கள்காந்தாரியை வணங்குதலும் அவள்
வாழ்த்துதலும்.

இருந்த மைந்தரு மேவலோடுசென்று
அருந்த திக்குநே ரன்னைதன்னையும்
பரிந்தி றைஞ்சினார்பயில வாழ்த்தினாள்
திருந்து பூணினாள் சிறுவர்தம்மையே.

     (இ -ள்.) இருந்த மைந்தரும்-(திருதராட்டிரனெதிரில்) இருந்த
பாண்டவர்களும், ஏவலோடு சென்று - (அத்திருதராட்டிரனது)
கட்டளைப்படியே போய், அருந்ததிக்கு நேர் அன்னைதன்னையும் -
அருந்ததியை யொத்த [சிறந்த பதிவிரதையாகிய] (தமக்குத்) தாய் முறையான
காந்தாரியையும், பரிந்து இறைஞ்சினார் - அன்பு கொண்டு வணங்கினார்கள்;
திருந்து பூணினாள் - தொழில்திருந்திய ஆபரணங்களையுடையவளாகிய
இந்தக்காந்தாரியும், சிறுவர் தம்மை - மக்கள் முறையான அப்பாண்டவர்களை,
பயில-நன்றாக, வாழ்த்தினாள்-; (எ - று.)

     அருந்ததி - வசிஷ்டமுனிவரது பத்தினி: பதிவிரதாதருமத்திற் சிறத்தலால்,
கற்புடைமகளிர்க்கு உவமை கூறப்படுவள்: ஏனையோரினும் இவட்குச் சிறப்பு
மற்றையிடங்களில் மாத்திரமேயன்றி நட்சத்திரநிலையிலும் கணவனை
விட்டுப்பிரியாது உடனிருத்தல்.  "மதியளித்ததொல்குலத்தவன் விழியிலா
மகனெனத் தமர் சொல்ல, விதியளித்ததென் றுளமகிழ்ந்தனள்
வடமீனெனத்தகுங்கற்பாள்,""இமைத்தகண்ணினை மலர்ந்தினிநோக்கலேன்
யானொருவரையென்று, சமைத்தபட்டமொன்றினிற் பொதி பெதும்பை" என்ற
சம்பவச்சருக்கச் செய்யுள்கள் இங்குக் காணத்தக்கன.