திருந்து பூண் - வேலைத்திறமமைந்த ஆபரணம். 'இருந்த மைந்தரும் மேவலோடுசென்று' என விரித்தல்விகாரங்கொண்ட பாடம், ஓசைநயஞ் சிறக்கும். (287) 135.- குந்தியின்பாக்கியத்தைக் காந்தாரி கருதுதல். முந்த வந்துதாண் முளரிகைதொழும் அந்தண் வல்லியு மைவர்மைந்தரும் வந்து நிற்றலு மகிழ்வொடுன்னினாள் குந்தி செய்தவங் கூருமென்னவே. |
(இ -ள்.) முந்த வந்து - (தனக்கு) எதிரில்வந்து, தான் முளரி - (தனது) தாமரைமலர்போன்ற பாதங்களை, கைதொழும் - கைகூப்பி வணங்கிய, அம் தண் வல்லியும் - அழகிய குளிர்ந்த பூங்கொடி போன்ற திரௌபதியும், ஐவர் மைந்தரும் - பஞ்ச பாண்டவர்களும், வந்து நிற்றலும் - (ஒருங்கே) வந்துநின்ற வளவில்,- (காந்தாரி),- குந்தி செய் தவம் கூரும் என்ன - 'குந்தி (முற்பிறப்பிற்) செய்த நல்வினை மிக்கதாகும்' என்று, மகிழ்வொடு உன்னினாள் - மகிழ்ச்சியோடு கருதினாள்; (எ - று.) தன் மக்களாகிய துரியோதனாதியரினும் பாண்டவர் மிகச் சிறந்து விளங்குதலால், தனது தவத்தினும் குந்தியின் தவம் மிக்கதெனக் காந்தாரி மதித்தனளென்க: இது, அழுக்காறு; தாள்முளரி - முன்பின்னாகத் தொக்க உவமைத்தொகை. முளரி - முட்களுள்ள அரையையுடையதெனத் தாமரைக்குக் காரணக்குறி; (அரி=அரை - தண்டின் சுற்றுப்புறம்.) (288) 136.-பாண்டவர்கள் வீடுமனைவணங்குதல். வேயை வென்றதோண் மின்னையங்குவைத்து யாயை யும்பணிந் தெழில்கொடோளினார் போய கண்டமும் போற்று கங்கையாள் சேயை யன்புடன் சென்றிறைஞ்சினார். |
(இ -ள்.) எழில் கொள் தோளினார் - அழகைக்கொண்ட தோள்களையுடையவர்களான பாண்டவர்கள்,-வேயை வென்ற தோள் மின்னை - மூங்கிலைச் சயித்த [மூங்கிலினும் அழகிய] தோள்களை யுடையவளான மின்னல்போன்ற திரௌபதியை, அங்கு வைத்து - அந்தக் காந்தாரியினகத்தில் இருக்கும்படி விட்டிட்டு, யாயையும் பணிந்து - தாயாகிய அக்காந்தாரியை வணங்கி விடையையும்பெற்று,- அகண்டமும் போய் போற்று கங்கையாள்சேயை - எல்லாவுலகத்தாரும் சென்றுவணங்கித் துதிக்கின்ற கங்காதேவியின் குமாரனான வீடுமனை, அன்புடன் சென்று இறைஞ்சினார்- அன்போடு போய் வணங்கினார்கள்; (எ - று.) யாயையும் பணிந்து என்பதற்கு - தமது பெற்றதாயாகிய குந்தியையும் வணங்கி (விடைபெற்று) என்பாருமுளர். பசுமை |