செய்ய மேனியன் - சிவந்த உருவத்தையுடையவனும், கமலம் நாயகன் - தாமரைக்குத் தலைவனுமாகிய சூரியன், கடலில் மூழ்கினான் - மேல் கடலில் முழுகுபவனானான் [அஸ்தமிப்பவனானானென்றபடி]; (எ - று.) விதுரன் துரியோதனனிடத்திலே பழகுபவனாயிருந்தும் நன்னெறியிற் செல்வது காரணமாகப் பாண்டவரிடத்தில் ஆதி தொடங்கியே மிக்க அன்புடையவனாய் அரக்குமாளிகையினின்று தப்புவித்தல் முதலியபேருபகாரங்களை அப்பாண்டவர்க்குச் செய்து வந்தனனாதலால், அவர்கள் அவ்விதுரனிடத்து அன்புகூர்ந்து அவன் வீட்டிற் சிறிதும் வேறுபாடு கருதாது உணவுண்டு மகிழ்ந்தனரென்பது, முன்னிரண்டடியில் விளக்கப்பட்டது. தமதின்-தமது - 'தாம்' என்பதனடியாப்பிறந்த ஒன்றன்பாற் குறிப்புவினையாலணையும் பெயர்; இன் - ஐந்தாம்வேற்றுமையுருபு, ஒப்புப் பொருளது. சூரியனைக் காண்கிற பகற்பொழுதிலே அலர்ந்தும் காணாத இராப்பொழுதிலே குவிந்தும் நிற்றலால், தாமரைக்குச் சூரியனைத் தலைவனாகக் கூறுதல், கவிசமயம். பார்ப்பதற்குக் கடலில் மூழ்குவதுபோலத் தோன்றுதலால், சூரியன் அஸ்தமித்தலை, கடலின் மூழ்குதலாகக் கூறினார். திமிரநாஸநன், கமலநாயகன் - வடசொற்றொடர்கள். (294) 142. - மாலைப்பொழுதின்வருணனை. தினக ரன்கரந் திகழ்க மண்டலம் பனிகொள் செக்கர்தம்படம தாகவே இனிய வந்தனைக் கெறியும்வேலைசேர் புனித ரொத்ததப் புன்கண்மாலையே. |
(இ -ள்.) அ புன் கண் மாலை - அந்தக்காலத்தில் தோன்றிய அற்பமான இடத்தையுடைய [சற்றுநேரம்மாத்திரமேயிருக்கக் கூடிய] மாலைப்பொழுதானது,- தினகரன் கரம் திகழ் கமண்டலம் (ஆக) - சூரியன் (தனது) கையில்விளங்குகிற ஜலபாத்திரமாகவும், பனி கொள் செக்கர் - குளிர்ச்சியைக்கொண்ட செவ்வானம், தம்படமது ஆக - தமது (அரையில் கட்டிய) காஷாய வஸ்திரமாகவும் (காணப்பட),-இனிய வந்தனைக்கு - நன்மையாகிய சந்தியாவந்தனஞ் செய்தற்பொருட்டு, எறியும் வேலை சேர் - (அலை) வீசுகின்ற மேல்சமுத்திரத்தைச் சேர்கிற, புனிதர் - பரிசுத்தராகிய துறவறத்தோரை, ஒத்தது-; (எ - று.) மேற்குத்திசையிற்சென்று சூரியன் அஸ்தமிக்குஞ்சமயத்திலே செவ்வானம் மிக்குப்பரவ, மாலைப்பொழுது தோன்றுவதை காவிவஸ்திரமுடுத்த துறவறமுடையோர் கமண்டலத்தையேந்திக் கொண்டு சந்தியாவந்தனஞ் செய்தற்பொருட்டு மேல்கடற்கரைக்குச் செல்வதாகக்குறித்தார்; உருவகவணியைஅங்கமாக் கொண்டுவந்த தன்மைத்தற்குறிப்பேற்றவணி. துறவிகள் காஷாய |