பக்கம் எண் :

சூதுபோர்ச் சருக்கம் 290

முடுத்தவராய்க் கையிற்கமண்டலமேந்திச் சந்தியாவந்தனஞ்செய்யுமாறு
நீர்நிலையை நோக்கிச்செல்லுதல், இயல்பு.  சூரியன் அஸ்தமிக்குஞ்சமயத்தில்
வெப்பம் மாறிக் குளிர்தொடங்குமாதலால் அப்போது தோன்றுஞ் செவ்வானம்,
'பனிகொள் செக்கர்' எனப்பட்டது.  படமது, அது - பகுதிப்பொருள்விகுதி.
'சந்தியாவந்தனஞ் செய்யாதுவிட்டால், பெரும்பாவம் விளையும்' என்பது
தருமசாஸ்திரங்களின் கொள்கையாதலால், அவ்வாறு பாவம் உண்டாகாது
செய்யப்படுஞ் சந்தியாவந்தனத்தை, 'இனிய வந்தனை' என்றார்.
'புன்கண்மாலை' என்பதற்கு - (காமுகர்க்கு) வருத்தத்தைச் செய்யும்
மாலைப்பொழுது எனப்பொருள் கூறுவாருமுளர்.  திநகரன், கரம், கமண்டலூ,
படம், வந்தநா, வேலா - வடசொற்கள்.                           (295)

143.-செவ்வானத்தில் விதுரனதுமாளிகையின் தோற்றம்.

காய்ந்த மெய்ச்செழுங் கதிரவன்கரம்
ஏய்ந்த வப்பதத் தெழிலெறித்தலால்
ஆய்ந்து பத்திகொண்டடர்ப சும்பொனால்
வேய்ந்த தொக்குமால்வேந்தன் மாடமே.

     (இ -ள்.) வேந்தன் மாடம் - அந்த விதுரனது மாளிகை,-காய்ந்த -
(பகற்பொழுதில்) உஷ்ணமாக ஒளிவீசின,  மெய் - உருவத்தையுடைய,
செழுங்கதிரவன் - செழித்த சூரியனது, கரம் - கிரணங்கள், ஏய்ந்த -
பொருந்திய, அ பதத்து - அந்தச்செவ்வானத்தினின்று, எழில் எறித்தலால் -
அழகிய செவ்வொளி வீசுதலினால்,-ஆய்ந்து - ஆராய்ந்து, பத்திகொண்டு -
வரிசை வரிசையாக, அடர் பசும் பொனால் வேய்ந்தது - நெருங்கிய
பசும்பொன் தகட்டினால் வேயப்பட்டதை, ஒக்கும்-; (எ - று.)ஆல்-ஈற்றசை.

    அஸ்தமநசமயத்திலே சூரியகிரணம் வானத்தில் தங்கியுள்ள
மேகங்களிற்பட்டுச் செவ்வான முண்டாக அந்தச் சிவந்த ஒளி விதுரனது
மாளிகையின் மேற்புறத்தில் பட்டு விளங்குதல், செம்பொன்தகட்டினால்
வரிசையாக அம்மாளிகை வேயப்பட்டதென்னும்படி யிருந்ததென
வருணித்தவாறு; இதுவும், தன்மைத்தற்குறிப்பேற்றவணியே.  சூரியன் ஆயிரங்
கிரணங்களையுடையவனாதலால், அவனை 'செழுங்கதிரவன்' என்றார்.  பதம் -
ஸ்தாநம்: பத்தி - வரிசை: வடசொற்கள்.  விசித்திரவீரியமகாராசனது
பத்தினிகளுள் அம்பிகையினால், தனக்கு ஈடாக அனுப்பப்பட்ட தாதிப்
பெண்ணிடத்திலே சந்தநுமகாராசனது பத்தினியான சத்தியவதியின் கட்டளைக்கு
உட்பட்ட வியாசமுனிவனது அருளினாற் பிறந்தவனான விதுரன்,
திருதராஷ்டிரனுக்கும் பாண்டுவுக்கும் தம்பியாக அச்சத்தியவதியினால்
ராஜகுலத்திலே வைத்து வளர்க்கப்பட்டு அரசர்க்கு உரிய மேன்மைகளை
யெல்லாம் அடைந்தனனாதலால், 'வேந்தன்' எனப்பட்டான்.  இனி,
வேந்தன்மாடம் - தருமராஜன் வீற்றிருந்த (விதுர) கிருக மெனினுமாம்.    (296)