144.-சந்திரோதயம். மன்கு லத்துளோர் வஞ்ச கஞ்செயார் என்கு லத்துளோ ரென்கொலீதெனத் தன்கு லத்துளோர் தமைவிலக்கவோ நன்கு லத்துளோ னுதயநண்ணினான். |
(இ -ள்.) 'மன் குலத்து உளோர் - அரச வமிசத்திற் பிறந்தவர்கள், வஞ்சகம் செயார் - (ஒருபோதும்) வஞ்சனைத்தொழிலைச் செய்யமாட்டார்கள்; என்குலத்து உளோர் ஈது என்கொல்-எனது வம்சத்திற் பிறந்தவர்களான துரியோதனாதியர்மாத்திரம் இவ்வாறு வஞ்சனைத்தொழில் செய்யத் தொடங்கியது என்ன விபரீதமோ? என - என்று எண்ணி, தன் குலத்து உளோர்தமை விலக்கவோ - தனது குலத்தவர்களான அத்துரியோதனாதியரை (அவ்வஞ்சனைத்தொழில் செய்யவொட்டாது) (விலக்குவதற்காகவோ, நல் குலத்து உளோன்-சிறந்த அந்தக் (குரு) குலத்துக்கு முதல்வனான சந்திரன், உதயம் நண்ணினான் - உதயமானான்; (எ - று.) சந்திரன் குளிர்ந்தகிரணத்தோடு அப்பொழுது உதயமானதை, தன் குலத்தவரான துரியோதனாதியர் பாண்டவரிடத்துப் பொறாமையினால் அவர்கட்குத்தீங்குசெய்யுமாறு மிக்கஉக்கிரங்கொண்டதைத் தணித்தற்கென்று உதித்ததாகக் காரணங்கற்பித்து வருணித்தார்; ஏதுத்தற்குறிப்பேற்றவணி. வினாப்பொருளதாகிய ஓகாரம் - தற்குறிப்பேற்றவுருபாய் நின்றது. தமது குலத்திற் பிறந்த சிறுவர்கள் மிக்க உக்கிரமாக மாறுபாடு கொண்டால் அப்பொழுது அக்குலத்துப் பெரியோர் இடைநின்று அவ்வுக்கிரத்தைத் தணிக்கும் இயல்பு, இங்குக் கருதத்தக்கது. அரசகுலத்திற் பிறந்தவர்கட்கு வெளிப்படையாக வீரங்காட்டிப் பொருதுவெல்லுதல் முறைமையேயன்றிச் சூது வழியாக வெல்லுதல் முறைமை யன்றென்பது, 'மன்குலத்துளோர் வஞ்சகஞ்செயார்' என்பதன் கருத்து. என்கொல் = 'என்' என்பதே வினாப்பொருளைத் தருதலால், கொல் - அசைநிலை. ஈது - சுட்டு நீண்டது. உதயம் - உதயகிரி: கிழக்கிற் சூரியசந்திரர் தோன்றுவதை உதயகிரியில் தோன்றுவதாகக் கூறுதல், கவிசமயம். (297) 145.-இருகவிகள் - சந்திரனதுவருணனையையும் துரியோதனனது கொடுமையையும் கூறும். குருகு லாதிபன் கொடிய நெஞ்சமே இருணி றைந்ததென்றியாம்வெ றுக்கவோ மரபி லாதியா மதியுமெண்ணினுட் கரிய னென்னுமா காணலானதே. |
(இ -ள்.) எண்ணின் - ஆலோசிக்குமிடத்து,-மரபில் ஆதி ஆம் மதியும் - (குரு) வமிசத்திற்கு மூலபுருஷனாகிய சந்திரனும், உள் கரியன் என்னும் ஆ - (தனது) உள்ளிடத்திலே [நடுவிடத்திற்] களங்க முடையவன்' என்று சொல்லும்படியாக, காணல் ஆனதே - பிரத்தியட்சமாகக் காணும்படியிருந்ததே; (ஆகவே), |