'குருகுல அதிபன் கொடிய நெஞ்சமே - (அந்தச்சந்திரவமிசத்தில் தோன்றிய) குருகுலத்தரசனான துரியோதனனது கொடுமையுள்ள மனம் மாத்திரமே, இருள் நிறைந்தது-இருட்டு [குற்றம்] நிறைந்துள்ளது,' என்று-, யாம் வெறுக்கஓ - நாம் வெறுக்கக்கடவோமோ? [வெறுப்பது தகுதியன்று என்றபடி]; (எ - று.) இது - கவிக்கூற்று. குலத்துமூலபுருஷனாகிய சந்திரன் உட் கறுப்புடையனாயிருத்தலால், அவ்வமிசத்தில் தோன்றிய துரியோதனனுக்கும் இருள் மனமுண்டாயிற் றென்றார்; 'உள்கரியன்' என்ற தொடர் சிலேடைவகையால் மனத்திற்குற்ற முடையவனென்று பொருள்படுதலோடு நடுவிடத்திற் களங்கமுடையவனென்றும் பொருள் படும்; ஆகவே, இது சிலேடையணியை அங்கமாகக் கொண்டுவந்த ஏதுவணியாம். 'நெஞ்சம் இருள் நிறைந்தது,' 'உட்கரியன்' என்ற தொடர்களை, திருக்குறளில் "அகங்குன்றி மூக்கிற்கரியார்"என்றார்போலக் கொள்க. குருகுலாதிபன் - தீர்க்க சந்தி பெற்ற வடமொழித்தொடர். நெஞ்சமே, ஏகாரம் - பிரிநிலை. வெறுக்க-வியங்கோள்வினைமுற்று: ஓகாரம்-எதிர்மறை. என்று+யாம் = என்றியாம்: குற்றியலிகரம். ஈற்றுஏகாரம் - தேற்றம். (298) | 146. | உண்ணி லாவுபே ரொளிமழுங்கிநீள் வெண்ணி லாவினால்வெளுத்த வெங்கணும் கண்ணி லான்மகன் கடுமையஞ்சியிம் மண்ணி லார்வௌா வடிவமெய்தினார். |
(இ -ள்.) (சந்திரன்), உள் நிலாவு பேர்ஒளி மழுங்கி-(தனது) நடுவிற் பொருந்திய பேரொளி (களங்கத்தினாற்) குறையப் பெற்று, நீள் வெள்நிலாவினால் எங்கணும் வெளுத்த - நீண்ட வெண்மையாகிய (தனது) காந்தியினால் (தனது) உடம்பு முழுவதும் வெண்ணிறமாய்க் காணப்பட்டது [உடம்பு முழுவதும் வெண்ணிறவொளியைப் பெற்றிருந்தது என்றபடி]; கண் இலான்மகன் கடுமை அஞ்சி - பிறவிக்குருடனான திருதராட்டிரனது மகனாகிய துரியோதனனது கொடுஞ்செய்கைக்குப் பயந்து, இ மண்ணில் - இவ்வுலகத்தில், ஆர் வௌா வடிவம் எய்தினார் - எவர்தாம் வெளுக்காத உருவத்தைப்பெற்றவர்? [எல்லாரும் வெளுத்துத்தோன்றினார்கள்]; இதுவும் - கவிக்கூற்று. இயற்கையில் சந்திரன் வெண்ணிறமுடையனா யிருத்தற்கு, துரியோதனள் கொடுமைக்கு அஞ்சியதால் வெளுத்ததாகக் காரணம் புனைந்துகூறினார்; ஏதுத்தற்குறிப்பேற்றவணி. முன்னிரண்டடிகளைப் பின்னிரண்டடிகள் சாதித்து நிற்பது - வேற்றுப்பொருள்வைப்பணி: இன்ன அணியெனத்துணிந்து கூறமுடியாமல் இவ்விரண்டணிகளும் ஒருங்கே நின்று ஐயமூட்டுதலால்,- இச்செய்யுள் ஐயக்கலவையணியின்பாற்படும்: இவ்வாறு வருவதனை, வடநூலார், 'ஸந்தேஹஸங்கரம்' என்பர். அச்சத்தினால் உடம்புவெளுத்தல், இயற்கை. வெளுத்த - வெளுத்தது: தொகுத்தல். 'வெளுத்ததெங்கணும்' என்பதும் பாடம். |