வௌா - ஈறுகெட்ட எதிர்மறைப்பெயரெச்சம். முந்தின செய்யுளின் தொடர்ச்சியினால், இச்செய்யுளின் முன்னிரண்டடிக்கு 'சந்திரன்' என்ற எழுவாய் வருவிக்கப்பட்டது. இனி, இச்செய்யுளின் முன்னிரண்டடிக்கு- 'நீள் வெள் நிலாவினால் - நீண்ட வெண்மையாகிய நிலாவினாலே, உள் நிலாவு பேர் ஒளி மழுங்கி - இந்நகரத்தினுள்ளே விளங்குகின்ற பேரொளி குறைந்து, எங்கணும் வெளுத்த-எல்லாவிடங்களும் வெண்ணிறமாகத் தோன்றின, என்று பொருள்கூறி, 'சந்திரனது நிலாவினால் அனைத்தும் வெளுத்தன; அவ்வாறே சந்திரனது வமிசத்தவனான துரியோதனனால் அவனைச்சார்ந்த யாவரும் அறிவு வெளுத்தார்கள் [நல்லறிவிழந்தார்கள்]' என எடுத்துக்காட்டுவமையணிபடக் கருத்து விரித்துரைப்பர் ஒருசாரார். (299) 147.- தருமனது விருப்பத்தின்படிதிரௌபதியும் விதுரனது மாளிகையை வந்தடைதல். விந்தை வாழ்வுகூர்விறன்மி குத்ததோள் முந்தை யோதைமா முரசுயர்த்தவன் சிந்தை காமுறத் தெரிவைவந்திளந் தந்தை கோயிலிற் றானுநண்ணினாள். |
(இ -ள்.) விந்தை வாழ்வு கூர் விறல் மிகுந்த தோள் - வீர லட்சுமி வசிக்கப்பெற்ற வலிமையை மிகுதியாகக்கொண்டுள்ள தோள்களையுடையவனும், முந்தை ஓதை மா முரசு உயர்ந்தவன் - முதன்மையான [கம்பீரமான] ஓசையையுடைய பெரிய முரச வாத்தியத்தின் உருவத்தை யெழுதிய கொடியை உயரநாட்டியவனுமான தருமபுத்திரனது, சிந்தை - மனம், காமுற - விருப்பங்கொள்ள (அவ்விருப்பத்தின்படியே), தெரிவை தானும் - திரௌபதியும், இளந்தந்தை கோயிலில்-(அத்தருமனுக்குச்) சிற்றப்பனான விதுரனது அரண்மனையில், வந்து நண்ணினாள்-வந்துசேர்ந்தாள்; வீரலஷ்மிக்கு விந்தியமலை உறைவிடமாதலால் அவளுக்கு 'விந்தை' என்று ஒருபெயர்; வடமொழியில் 'விந்த்யவாஸிநீ' என வழங்குதல் காண்க. விந்தை = துர்க்கை. முந்தையோதை-முரசுக்கு அடைமொழி. முந்தை, ஐ - சாரியை. தானும், உம்மை-இறந்தது தழுவியது. (300) 148.- சூரியோதய வருணனை. மங்குல் சுற்றுமா மண்டபத்திடைக் கங்கு லிற்றடங் கண்டுயின்றபின் பொங்கு லைப்படும் பொற்றசும்பெனச் செங்கு லக்கதிர்த் திகிரிதோன்றவே. |
இதுவும் அடுத்த கவியும் - குளகம். (இ -ள்.) (பாண்டவர்களும் திரௌபதியும்),- மங்குல் சுற்றும்-மேகங்கள் வந்து சூழப்பெற்ற [மிகவுயர்ந்த], மா மண்டபத்திடை - விதுரன் மாளிகையிலுள்ளதொரு பெரிய மண்ட |